×

ஊரடங்கை மறக்க வைத்த ஞாயிறு காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்தது கூட்டம்: புதிய உத்தரவுப்படி கடைகள் பிற்பகலில் மூடல்

நெல்லை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் அத்தியாவசிய தேவைகளுக்காகத் திறக்கப்பட்ட காய்கறி, இறைச்சி, மீன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விற்பனை படுஜோராக நடந்தது. அதிக அளவில் வந்திருந்த மக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு கடந்த 5 நாட்களில் இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் அதிக அளவில் இறைச்சி, மீன், பிராய்லர் மற்றும் காய்கறி கடைகள் திறந்திருந்தன. காலையில் இருந்து மதியம் வரை விற்பனை படுஜோராக நடந்தது.

குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ.65 க்கு விற்பனையான சிக்கன் நேற்று 145 ரூபாய்க்கு விற்பனையானது. மட்டன் கிலோ ரூ.750 முதல் 900 வரை விற்பனையானது. அதிக அளவில் வந்திருந்த மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். புதிய மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டுகளில் காய்கனி விலையேற்றம் இருந்தபோதும் சகித்துக் கொண்டு மக்கள் வாங்கிச் சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு புதிய நடைமுறைகள் ஒவ்வொரு நாளும் அமல்படுத்தப்படுகின்றன.

அதன்படி சாலைகளில் தேவையற்ற வாகனப் போக்குவரத்தை குறைக்க நேற்று முதல் அதிகாலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை நேற்று முதல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்குள் காய்கறி, மளிகை கடைகளில் வியாபாரத்தை முடித்தனர். காத்திருந்தவர்களை மறுநாள் வரும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதேபோல் 2.30 மணிக்கு கடைசியாக வந்தவர்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்கிய நிறுவனங்கள் அதன் பின்னர் நுழைவு பகுதியை கயிறு கட்டியும், டிரம்களை அடுக்கி வைத்தும் மூடினர்.

சில பங்க்குகளில் செயல்படும் நேரம் குறித்த விபரங்களை முகப்பில் எழுதி வைத்திருந்தனர். இதனால் இந்த விபரம் தெரியாமல் பிற்பகலுக்கு மேல் வந்தவர்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இந்த நடவடிக்கையால் வாகன போக்குவரத்து ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது.

Tags : crowds ,meat shops ,shops ,closure ,meat shop ,crowd , Vegetable, meat shop, crowd
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...