×

கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது: கோவை வாளையார் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை: கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக எல்லையான வாளையார் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய கேரள போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாநிலம் முழுவதும் 181 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில், கேரளா போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு, கடுமையான சோதனைக்கு பிறகே வாகனங்கள் கேரளாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறது.

சோதனை சாவடியில் வாகனங்களின் எண்கள், வாகன ஓட்டுநர் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பெறப்படுகிறது. மேலும், வாளையார் வழியாக கேரளாவிற்குள் நுழையும் அனைத்து நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதே போல், கேரளாவில் இருந்து வாளையார் வழியாக கோவைக்கு வரும் வாகனங்களை தமிழக போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவர்களை தமிழகத்திற்குள் அனுமதிப்பது இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்களில் கருப்பு கொடி
வாளையார் சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உறவினர்கள் இறப்பு போன்ற துக்க காரியங்களுக்கு செல்லும் வாகனங்களில் முன்பு கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது. இது போன்ற வாகனங்களில் வரும் நபர்களிடம் விசாரணை செய்து கேரளாவிற்குள் கேரள அரசின் சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

Tags : Corona ,Kerala Kerala ,bailiff ,Coimbatore , Kerala, Corona, Coimbatore bailiff, intensive watch
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...