×

சமூக பரவல் மூலம் நோயின் வேகம் தீவிரம்: கொரோனாவுக்கு 10 மாத குழந்தையும் தப்பவில்லை

* மேலும் 8 பேருக்கு கொரோனா நோய் உறுதி
*  பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

சென்னை : 10 மாத குழந்தை உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சமூக பரவல் மூலம் நோயின் வேகம் அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். எனவே வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 8 பேருக்கு சமூக பரவல் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  தாய்லாந்தில் ஈரோடு வந்த 69 மற்றும் 75 வயது முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 21ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் தொடர்புகொண்டவர்கள் என நேற்று 8 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 8 பேரில் ஈரோட்டை சேர்ந்த ரயில்வே பெண் மருத்துவரும் ஒருவர். தாய்லாந்து குழுவுடன் தொடர்பில் இருந்த ஒருவர் இவரை சந்தித்ததால் பெண் மருத்துவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவரால் இவரது பத்து மாத குழந்தை, தாய், வீட்டில் வேலை செய்யும் பெண்மணி உள்ளிட்ட 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லந்து குழுவின் தொடர்பில் இருந்த மீதம் உள்ள 180 பேருக்கு கொரோனா இருக்க வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சுகாராத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களில் சுகாதாரத்துறை தரப்பில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. சென்னையில் சுமார் ஒரு லட்சம் பேரிடம் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்களும், சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர்களும் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட  தாய்லாந்தை சேர்ந்தவர்களுடன் ெதாடர்பில் இருந்த 8 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்த மாவட்டங்களில் இதுவரை 17 ஆயிரம் படுக்கைகளுடன் மருத்துவமனைகள்  தயார் நிலையில் உள்ளது. 4 ஆயிரம் படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்த   பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை வெளிநாடுகளில் இருந்த வந்த 43,538 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மீதமுள்ளவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய் துறை ஆதிகாரிகள் இணைந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : infant , Social Distribution, Corona, Child
× RELATED ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பிறந்த...