×

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

சென்னை: சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வெளிமாநிலங்களைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்  புலம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்கிறார்கள். கொரோனா வைரசின் கொடூரத்தையொட்டி நாடெங்கிலும்  நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவர்கள் தங்குமிடம், உணவு மற்றும் மாற்று உடைகள் இன்றி தவிக்கிறார்கள்.

அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்கவைத்து உணவு மற்றும் உடைகள் வழங்குவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் அப்படி உணவின்றி தவிக்கும் தொழிலாளர்கள் நேற்று ஒன்றுகூடி முறையிட்டபோது, போலீசார் அவர்கள்மீது ஈவிரக்கமின்றி தடியடி நடத்தி கலைத்துள்ளனர். காவல்துறையினரின் இந்தப்போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 15.86 லட்சம் தொழிலாளர்கள் அண்டை மாநிலங்களில் தங்கி வேலை செய்துவருகின்றனர்.

மகராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, கோவா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுபோலவே அவர்களும் உணவில்லாமல் சிக்கித் தவிக்கிறார்கள். எனவே, அவர்களுக்காக தமிழக முதல்வர் அந்தந்த மாநில அரசுகளைத்  தொடர்பு கொண்டு பேசி தங்குமிடம் உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Thiruvananthapuram ,government ,shelter ,Tamil Nadu , Foreign Workers, Shelter, Food, Tamil Nadu Government, Thirumavalavan
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...