×

இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை: மோடி, எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ்க் குடும்பங்கள் பத்திரமாகவும், நலமாகவும் வீடு திரும்ப பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தோனேசியத் தமிழ்ச்சங்கம் தலைவர் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:இந்தோனேசியாவில் தற்சமயம் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி கொண்டுள்ளது. இங்கு தமிழ் மக்கள் ஏறக்குறைய 400 குடும்பங்கள் தலைநகர் ஜகார்த்தாவிலும், ஏறக்குறைய 30 தமிழ் குடும்பங்கள் பாண்டுங் நகரத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து தமிழ் மக்களும், கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளும் பொருட்டு நம் தாயகம் தமிழ்நாட்டிற்கு திரும்ப வர விரும்புகிறார்கள். ஆனால், தற்சமயம் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தமிழ் குடும்பங்கள், தமிழ்நாட்டிற்கு திரும்பி வர முடியாமல் தவிக்கின்றார்கள். ஆகவே, தாங்கள் தயை கூர்ந்து முதல்வரிடமும், பிரதமருடன் பரிந்துரைத்து, இங்கே உள்ள தமிழ் மக்கள் நாடு திரும்ப விமான போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ்க் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பி வர விரும்பும் தகவல் எனக்கு கிடைத்தது. அவர்கள் பத்திரமாகவும் நலமாகவும் வீடு திரும்ப இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் உடனடியாக மீட்பு உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : families ,Tamil ,Indonesia ,home , Indonesia, 430 Tamil families, Modi, Edappadi, MK Stalin
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....