×

கொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமலானது

* பிற்பகல் 2.30 மணிக்கு மேல் இயங்காது
* சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் n தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: கொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு நேரக்கட்டுப்பாடு நேற்று முதல் அமலானது. பிற்பகல் 2.30 மணிக்கு மேல் கடைகள் இயங்காது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் வரை பலியாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். இதையடுத்து இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானம், ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து  கடை, பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய  பொருட்களை கொண்டு செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எவ்வளவு தான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்வோர் இருக்க தான் செய்கின்றனர். அவர்களை போலீசார் எவ்வளவு தான் எச்சரித்து அனுப்பினாலும் வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை. அது மட்டுமல்லாமல் மளிகை  கடைகள், மருந்துக்கடைகள், காய்கறி கடைகள் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் இன்னும் இருக்க தான் செய்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொருட்களை மக்கள் கூட்டம், கூட்டமாக வாங்கி செல்கின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. ெகாரோனா பரவலை தடுக்கும் வகையில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு நேரம் கட்டுப்பாட்டை விதித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதாவது, இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில்  அளித்த பேட்டி:  கோயம்பேடு போன்ற மாநிலத்தின் மொத்த காய்கறி, பழ அங்காடிகளுக்கு மாநிலத்தில் இருந்தும், வெளிமாநிலத்தில் இருந்தும் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும். கோயம்பேடு  காய்கறி அங்காடி மற்றும் மாநிலத்தில் பிற காய்கறி விற்பனை கடைகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். மருந்தகம், உணவகங்கள்(பார்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்.

108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்குகள் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும். வயது முதிர்ந்தோர் வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர், சமைத்த உணவு பொருட்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர். இவர்களின் நலன் கருதி ஸ்விகி, சோமோட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் காலை 7 மணி முதல் காலை 9.30 வரை காலை சிற்றுண்டியும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்து சென்று வழங்கலாம்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் தருணத்தில் பொதுமக்களும், இந்நோயின் பரவலின் தீவிரத்தை உணர்ந்து முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காய்கறி, மளிகை பொருட்கள், விற்பனை செய்யும் கடைகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, கடைகள் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : spread , Corona, Grocery, Vegetable Stores, Petrol
× RELATED எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை