×

கொரோனா பரவல் தீவிரத்தால் கபசுர குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு: தமிழக அரசு அலட்சியமா?

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இருந்து 12 மூத்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா பேராசிரியர்கள் தங்கள் துறை மூலம் என்ன செய்யலாம் என்று பிரதமரிடம் ஆலோசித்தனர். அப்போது சித்த மருத்துவ கவுன்சிலின் டைரக்டர் கனகவல்லி, மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரி பிச்சையகுமார், டாக்டர் சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, அனைத்து மருத்துவர்களும் ஆலோசனை நடத்திய பிறகு, சித்த மருத்துவ மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிரதமரிடம் நேரடியாக காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் “கபசுர குடிநீரை வழங்க மாநில அரசுக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் நவீன மருத்துவத்துடன் சேர்ந்து இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருந்தியல் ஆய்விற்கும் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய போது நவீன மருத்துவத்துடன் நிலவேம்பு கசாயம் சேர்த்து கொடுக்கப்பட்டது. அதேபோன்று தற்போது நவீன மருத்துவத்துடன் கபசுர குடிநீரையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த நிபுணர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துக் கடைகளில் கபசுர குடிநீர் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அரும்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் தங்கள் குடும்பம், உறவினர்களுக்கு தேவையான கபசுர குடிநீரை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. இதனால் வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள் கபசுர குடிநீர் கிடைக்காமல் கடை கடையாக அலைந்தனர். மேலும், பொதுமக்கள் இந்த அளவிற்கு கபசுர குடிநீர் கேட்டு அலையும் பட்சத்தில் அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீரை தயாரித்து வழங்காமல் தமிழக அரசு தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தமிழகம் முழுவதும் இதுபோல மக்கள் கபசுர குடிநீர் கேட்டு அலைந்துள்ளனர். இதன் காரணமாக, அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu , Corona, Kapasura Drinking Water, Government of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...