சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; கொரோனா நோயாளியை கட்டிப்போட்ட பாக். மருத்துவமனை: அழுது துடித்து பரிதாபமாக இறந்தார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளி தப்பி ஓடாமல் இருக்க, கட்டிப் போடப்பட்ட நிலையில் அழுது துடித்து இறந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 1,495-ஐ தாண்டிய நிலையில் 12 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. லாகூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து அந்த வீடியோ வெளிவந்துள்ளது. இந்த மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள், ஒரு நோயாளியை ஓடவிடாமல் படுக்கையில் கட்டி வைத்துள்ளனர்.

இந்த நபர் உதவிக்காக தொடர்ந்து அழைக்கிறார். ஆனால் ஊழியர்கள் எவரும் கேட்கவில்லை. இறுதியில், இந்த நபர் இறந்தார். கொரோனா நோயாளியின் இந்த வேதனையான சம்பவம் வீடியோவில் காணமுடிகிறது. இந்த வீடியோ பதிவை, பாகிஸ்தான் பத்திரிகையாளர் நைலா இனாயத் என்பவர் டுவிட் செய்துள்ளார். நோயாளியின் மரணம் குறித்து விசாரணைக்கு அம்மாநில முதல்வர் உஸ்மான் புஸ்தார் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சில கடினமான முடிவுகளை அறிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், ‘வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிலைமையை மேம்படுத்த மற்ற நாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களின் உதவியும் தேவை. ஈரானில் இருந்து வந்த வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் திபான் எல்லையில் குறைவான வசதிகளுடன் இருப்பது கவலையளிக்கிறது. அங்கு, தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்படும்’ என்றார்.

Related Stories:

More