×

இத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது; அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்: தனியாளாக பிரார்த்தனை செய்தார் போப்

வாடிகன்: இத்தாலியில் கொரோனா பலி 10,000ஐ தாண்டிய நிலையில், அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் எனக்கூறி தனியாளாக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரார்த்தனை செய்தார். இத்தாலி அடுத்த வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தனியாக நின்று ஜெபம் செய்தார். வரலாற்றில் இதுவே முதல் முறை. சதுக்கத்தில் எங்கும் எவரும் இல்லை. நகரவாசிகளுக்காக போப் ஜெபித்தார். அப்போது, ‘நகரம், தெருக்களைச் சுற்றியுள்ள இருட்டில் பலர் இறந்துவிட்டனர். கொரோனா வைரஸ் ஒரு புயல் என்றால், நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்.

சாதாரண மக்கள் ... செய்தித்தாள் மற்றும் பத்திரிகை தலைப்புச் செய்திகளில் தோன்றாதவர்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மளிகைக் கடை ஊழியர்கள் மற்றும் துப்புரவாளர்கள், தொற்றுநோயின் முன்னணியில் பணியாற்றும் பிற அத்தியாவசிய ஊழியர்களுக்கும் எனது நன்றிகள்’ என்று தெரிவித்தார். இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போப் பிரான்சிஸ் பிரார்த்தனை கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. மேலும், இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 பேரைக் கடந்துவிட்டது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 889 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிப். 21ம் தேதி அன்று தொற்றுநோய் தோன்றியதிலிருந்து இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கை. மொத்த இறப்புகள் 10,023ஐ எட்டியுள்ளன. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,472 ஆக உயர்ந்தது. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Italy ,Pope , Italy, solo, prayer, Pope
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்