×

வறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பால் திருச்சியில் விவசாயி தற்கொலை: கடன் விரக்தியில் உயிரை மாய்த்தார்

திருச்சி: வறட்சி, இயற்கை பேரழிவை தொடர்ந்து கொரோனாவால் வாழைத்தார் விலை போகாத காரணத்தால், திருச்சியில் விவசாயி வாழை விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் பெரியசாமி (65). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். 10 நாட்களுக்கு முன் வாழை தார்களை அறுத்து, லாரியில் கேரளாவுக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால், வாழைத்தார் சரியாக விலை போகவில்லை.

ஒரு கிலோ ரூ10 என்ற அளவில் தான் விலை போனது. அப்படியானால் ஒரு தார் ரூ150க்கு விலை போயிருக்கும். தார் ரூ300 என்ற அளவில் விற்றால் தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மிக குறைந்த விலைக்கு வாழைத்தார் விற்றதால், பெரியசாமிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. வாழை சாகுபடிக்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று புலம்பிக்கொண்டே இருந்தார். இந்த விரக்தியில் கடந்த 24ம் தேதி விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பெரியசாமி இறந்தார்.

இதுபற்றி பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெரியசாமிக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதுபற்றி திருச்சி மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அறுவடை செய்யப்படும் வாழைத்தார் உள்ளிட்ட வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். சரியாக வாழைத்தார் விலை போகாத காரணத்தால் தான், பெரியசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தமர்சீலி, திருவளர்ச்சோலை, லால்குடி, ஜீயபுரம், எட்டரை, கோப்பு, பெட்டவாய்த்தலை பகுதிகளில் 2,000 ஏக்கரில் நேந்தரம் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து இல்லாததால், இந்த வாழைத்தார்கள் அறுக்க முடியாமல் உள்ளது. இப்போதே பாதி மரங்களில் வாழைத்தார்கள் பழுக்க துவங்கி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அனைத்து தார்களும் பழுத்து விடும். இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்திப்பார்கள். ஏற்கனவே காவிரி நீர் கிடைக்காதது, பருவ மழை பொய்த்தது, இயற்கை பேரழிவு ஆகிய காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதித்தனர். பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

இப்போது கொரோனாவும் பாதிப்பை கொடுத்து வருகிறது. எனவே வெளி மாநிலங்களுக்கு வேளாண் பொருட்களை கொண்டு செல்ல மட்டும் வாகனங்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நடப்பாண்டு விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இனிமேலும் விவசாயிகளின் தற்கொலை நடக்காமல் இருக்க எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : suicide ,Trichy ,disaster ,drought ,The Drought and Natural Disaster , Coronavirus, Trichy, farmer suicide
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்