×

சத்தியமங்கலம் பகுதியில் வாழைத்தார் அறுவடை செய்யாததால் பல லட்சம் நஷ்டம்: விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம், மார்ச் 29: கொரோனா வைரஸ் எதிரொலி சத்தியமங்கலம் பகுதியில் வாழைத்தார்கள் அறுவடை செய்யாததால் வாழைமரங்களில் வாழைப்பழங்கள் பழுத்து வருகின்றன. இதனால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வாழை பயிரிட்டுள்ளனர். நேந்திரன், கதலி, செவ்வாழை, ஆந்திர ரஸ்தாளி, ஜி9 உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒருவார காலமாக விவசாய தோட்டங்களில் வாழைத்தார் அறுவடை பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழை மரங்களில் வாழைக்காய்கள் பழுத்து தொங்குகிறது. விவசாய விளைப்பொருட்களை கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தபோதும் அறுவடை செய்ய கூலி ஆட்கள் வருவதில்லை எனவும், மேலும் வாழைத்தார்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என கூறும் விவசாயிகள் வாழைத்தார்கள் பழுத்து பழமாகி வீணாவதால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசே வாழைத்தார்களை கொள்முதல் செய்து அந்தந்த பகுதி நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வாழை பயிரிட்டுள்ள விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : millions ,Sathiyamangalam , Satyamangalam, banana harvest, loss
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...