×

சென்னை சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை

* கபசுர குடிநீரை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரை

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மருத்துவ நிபுணர்களுடன் நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையடுத்து சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா மருத்துவர்களிடம் மத்திய சித்த ஆராய்ச்சி நிலையம் மூலம் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் பேச முடிவு செய்தார். இதையடுத்து நேற்று பகல் 11.30 மணியளவில் மத்திய ஆராய்ச்சி கவுன்சிலுக்கு வந்த 12 மூத்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா பேராசிரியர்கள் தங்கள் துறை மூலம் என்ன செய்யலாம் என்று 3-4 நிமிடங்கள் பேசினர்.

அப்போது சித்த மருத்துவ கவுன்சில் டைரக்டர் கனகவல்லி, மாநில மருந்து உரிமை வழங்கும் அதிகாரி பேராசிரியர் பிச்சையா குமார், டாக்டர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு சித்த மருத்துவ மூத்த பேராசிரியரும் தேசிய சித்த மருத்துவ மருந்தியல் குழுவின் தலைவருமான டாக்டர்.ஜெயப்பிரகாஷ் நாராயணன் சித்த மருத்துவர்கள் சார்பாக பிரதமரிடம் நேரடியாக காணொலி காட்சி மூலம் உரையாடியுள்ளார்.   அப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் “கபசுரக் குடிநீரை வழங்க மாநில அரசுக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் நவீன மருத்துவத்துடன் சேர்ந்து இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருந்தியல் ஆய்விற்கும் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய போது நவீன மருத்துவத்துடன் நிலவேம்பு கசாயம் சேர்த்து கொடுக்கப்பட்டது. அதைப்போன்று தற்போது நவீன மருத்துவத்துடன் கபசுரக் குடிநீரையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.அதைப்போல் ஆயுர்வேத பிரிவின் மூத்த பேராசிரியர் திரிவ்யகுணா, யோகா பேராசிரியர் நாகேந்திரா மற்றும் ராஜீவ், கோவை ஆரிய வைத்யசாலாவின் மருத்துவர்.கிருஷ்ணகுமார், ஹரித்துவாரின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, பேராசிரியர் ஹமீது, மருத்துவர் அனுரோக் ஷர்மா ஆகியோர் பிரதமரிடம் ஆயுர்வேதா, யோகா குறித்து எடுத்துரைத்துள்ளனர்.  இதையடுத்து பிரதமர் பேசும்போது, ‘இந்த காலகட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஓமியோபதி துறைகளின் பங்களிப்பு முக்கியமானது.

ஆனால் ஆதாரங்களுடன் கூடிய ஆராய்ச்சி இருக்க வேண்டும். அதைத் தான் உலகமும் நவீன மருத்துவமும் எதிர் நோக்கி இருக்கிறது’ என்று கூறியதாக கூறப்படுகிறது. எனவே கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கலாம் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Tags : Chennai Siddha ,Modi ,Omopathy ,Unani ,professionals ,Yoga Practitioners , Chennai Siddha, Ayurveda, Unani, Omopathy, Yoga Practitioners, PM Modi, Video
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...