கோவை - திருப்பூரில் உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்கள்: முற்றுகை போராட்டம் நடத்தியதால் போலீசார் தடியடி- உணவுக்கு ஏற்பாடு

கோவை: கோவை, திருப்பூரில், உணவின்றி வடமாநில தொழிலாளர்கள் பரிதவித்தனர். கோவையில் சாப்பாடு கேட்டு சாலையில் முற்றுகையிட்டனர். கலைந்து செல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். பின்னர், உணவு வரவழைத்து சாப்பிட செய்தனர்.  கோவை சுந்தராபுரம் காமராஜ் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். பீகார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர்கள் அடுக்குமாடி கட்டும் பணிக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு காரணமாக இவர்கள் வீட்டில் உள்ளனர். ஓட்டல்களில் சாப்பிட்டு வந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக உணவின்றி தவித்துள்ளனர். இவர்களை அழைத்து வந்த நிறுவனத்தினரும் உணவு வசதி செய்து தரவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று மதியம் 700 தொழிலாளர்கள் தங்களது வீட்டின் அருகேயுள்ள ரோட்டில் குவிந்தனர். எத்தனை நாளுக்கு நாங்கள் பட்டினி கிடப்பது, ஓட்டல் திறக்க மாட்டீர்கள், சாப்பாடும் தர மாட்டீர்கள், வீட்டில் நாங்கள் என்ன செய்வது என ஆவேசமாக கூச்சலிட்டனர். தகவலின்பேரில், போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.  ‘‘நிரந்தரமாக உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்’’ என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால், ‘உணவு கிடைக்காமல் செல்லமாட்டோம்’ என்று கூறி போலீசாருடன் வட மாநில தொழிலாளர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதன்பின், தப்பித்தால்போதும் என்று நாலாபுறமும் அவர்கள் ஓடினார்கள். எனினும் தனியார் அமைப்பினர் உதவியுடன் சில நிமிடத்துக்குபின் உணவை போலீசார் வரவழைத்தனர். இதையடுத்து, தொழிலாளர்கள் ஒன்றுகூடி உணவருந்தினார்கள். 246 பேருக்கு மளிகை  பொருட்கள்:  திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில், பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். அவர்களில் பலர் வேலையில்லாமல் உணவுக்கு சிரமப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் தனியார் அமைப்புகளும் சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோடு வெட்டுப்பட்டான்குட்டை பகுதியில் தங்கியிருந்த 164 பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 3 வாரத்திற்கான உணவு பொருட்களை வழங்கினர். இதேபோல், திருப்பூர் வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட சாமுண்டிபுரம், ஈட்டிவீரம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் ஒடிசாவை சேர்ந்த 32 பேர் தங்கியிருந்தனர். ஊத்துக்குளி குளத்துப்பாளையத்தில் உள்ள உத்தரபிரதேசத்தை சேர்ந்த 50 பேர் உணவின்றி தவித்தனர். அவர்களுக்கும் அதிகாரிகள் உணவு மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர்.

Related Stories:

>