×

டெல்லி பஸ் நிலையத்தில் 3 கி.மீ நின்ற உ.பி மக்கள்

புதுடெல்லி:  கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து வந்து டெல்லியில் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்கள் கட்டுமான தொழில், தையல் தொழில்,  தச்சுத்தொழில் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் வேலையில்லாததால் உணவின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து,  சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று டெல்லி ஆனந்த் விஹார் பஸ் நிலையில்  குவிந்தனர். குறிப்பாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் குவிந்தனர்.

எந்த பஸ்சிலாவது ஏறி சொந்த ஊர் திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் 3 கிமீ தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இது தொடர்பாக உ.பி.யின், மயாயூன் கிராமத்தில் இருந்து டெல்லியில் தங்கியுள்ள போக்குவரத்து உதவியாளர் ஒருவர் கூறுகையில், ‘‘பணமின்றி டெல்லியில் வாழ்வது கடினம். என்னிடமும் பணமோ, சேமிப்போ இல்லை. எனவே, வீட்டு வாடகை செலுத்த முடியாததால் சொந்த ஊர் திரும்புகிறேன்,’’ என்றார்.

85 வயது டாக்டர் பலி
மும்பையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 85 வயது டாக்டர் மரணமடைந்தார். இந்த டாக்டரின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து மும்பைக்கு திரும்பியிருந்தனர். அவர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 85 வயது டாக்டருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் மாகிமில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் அவர் இறந்தாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : bus station ,Delhi , Delhi Bus Station, Madhya Pradesh
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்