×

வெளியில் நடமாடினால் ட்ரோன் மூலம் வழக்கு: திருச்சி போலீஸ் அதிரடி

திருச்சி: கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் காய்கறி, பால் விநியோகம், மெடிக்கல் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காரணமின்றி வெளியே நடமாட கூடாது எனவும் எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பைக்கில் இளசுகள் ஜாலியாக உலா வருகின்ரனர். இவ்வாறு தடையை மீறி திருச்சி மாநகர், மாவட்டத்தில் சுற்றிய 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் தெருக்களின் சந்துகளில் நடப்போரும், கூடி நின்று பேசுவோரின் கூட்டம் குறையவில்லை. இதை கண்காணித்து குறைக்கும் நடவடிக்கையாக  ஸ்ரீரங்கம்,  கோட்டை, பொன்மலை, கண்டோன்மென்ட்  ஆகிய 4 ரேஞ்சுகளில் ‘ட்ரோன்’ மூலம் கேமரா வைத்து கண்காணித்து  மாநகர போலீசார் அதிரடியில் இறங்கியுள்ளனர். ட்ரோன் எனப்படும் ஆளில்லா கண்காணிப்பு கேமராவை பறக்க விட்டு அதன் மூலம் போலீசார் மானிட்டரில்  தெருக்களில் கூடுவோரை கண்டுபிடித்து அங்கு சென்று அவர்கள் மேல் வழக்கு போடவும் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி நேற்று இரவு ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் இந்த ‘ட்ரோன்’ எனப்படும் கண்காணிக்கும் கேமராவை பயன்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று மதியம் தில்லைநகர் பகுதியில் உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 144 தடை உத்தரவு குறித்து மாநகர போலீசார் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில்தான் 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கொரோனா வைரசின்  வீரியத்தை உணராமல் வெளி வருகின்றனர்.

 இப்படி வெளியே வருவதால் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.  இப்படி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கு பின் அந்த  வழக்காக மக்கள் அலைய வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும் எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து வெளியே வராமல் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Trichy Police Action Drone ,Trichy , Drone, case, Trichy police
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்