×

கர்நாடகாவில் இருந்து ராமநாதபுரம் சென்ற 664 மீனவர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தம்: சத்தியமங்கலம் அருகே பரபரப்பு

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு 27 வாகனங்களில் சென்ற 664 மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சத்தியமங்கலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இவர்கள் ஆண்டுக்கு 10 மாதம் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதும், அவ்வப்போது ராமநாதபுரம் சென்று தங்களது குடும்பத்தினரை பார்த்துவிட்டு செல்வதும் வழக்கம்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மீன்பிடித்தொழில் தற்போது நடைபெறாததால் மங்களூரு பகுதியைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள், ராமநாதபுரம் மீனவர்களை தமிழகத்திற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 27 வாகனங்களில் வந்த 664 மீனவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து தமிழகம் நோக்கி நேற்று வந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களை தமிழக போலீசார் மற்றும் வனத்துறையினர் தமிழகத்திற்குள் அனுமதிப்பா? வேண்டாமா? என ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு தகவல் தெரிவித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தமிழக - கர்நாடக எல்லையில் வனப்பகுதியில் மீனவர்கள் உண்ண உணவின்றி ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் டி.எஸ்பி. சுப்பையா மாவட்ட உயரதிகாரிகளிடம் கலந்து பேசினார். அப்போது எல்லையில் காத்திருக்கும் மீனவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என மருத்துவக்குழுவினர் பரிசோதித்து பின்னர் தமிழகத்திற்குள் அனுமதிக்குமாறு கூறப்பட்டது.

இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்யும் பணி நடந்தது. அதன்பின், அனைவரும் மாற்று வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : fishermen ,Ramanathapuram Karnataka ,Ramanathapuram , Karnataka, Ramanathapuram, Fishermen, Detention
× RELATED புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக...