×

கொரோனா வைரஸ் எதிரொலி; நெய்வேலி டவுன்ஷிப் சாலை துண்டிப்பு

நெய்வேலி: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெய்வேலி டவுன்ஷிப் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நெய்வேலி டவுன்ஷிப் பகுதி உள்ளது. இங்கு என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள், கல்வி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், காவல் துறையினர் உட்பட பலரும் வசித்து வருகின்றனர். இங்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலத்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நிறுவனம் சார்பில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நெய்வேலி நகருக்கு வருவதற்கு சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள ஆர்ச் கேட் வழியாகவும், கடலூர்-சேலம் சாலையில் மந்தாரக்குப்பமும் ஆகிய இரண்டு சாலை வழிகள் மட்டுமே பிரதான வழியாக உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்த சாலைகள் வழியே நகருக்கு அனைவரையும் முழுமையான விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுமட்டுமில்லாமல் நகருக்கு வருவதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட இணைப்பு சாலை வழிகள் உள்ளது. இவைகளின் வழியாக அதிகளவில் நகருக்கு மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த முடிவு செய்த என்எல்சி நிர்வாகம் இந்த இணைப்பு சாலைகள் சிலவற்றை அகழி போல் பள்ளம் தோண்டி துண்டித்துள்ளனர். சில சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி செக்யூரிட்டிகளை நிறுத்தி முழுமையான விசாரணைக்கு பின்னரே நகருக்குள் வர அனுமதிக்கின்றனர். இதனால் நெய்வேலி டவுன்ஷிப் தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

Tags : Corona ,Neyveli Township Road , Corona Virus, Neyveli Township Road, Disconnection
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...