×

ஏற்றுமதி செய்ய முடியவில்லை; பல கோடி மதிப்பு பலாப்பழங்கள் அழுகி வீணானது: விவசாயிகள் வேதனை

பண்ருட்டி: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பண்ருட்டி பகுதியில் பல கோடி மதிப்புள்ள பலாப்பழங்கள் அழுகி வீணானது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் வருகிற 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ், ரயில், லாரி உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராத வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பலாப்பழங்களுக்கு பெயர்போன கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக தை மாதம் பூப்பூத்து மாசி, பங்குனி, சித்திரை மாத சீசன் காலத்தில் பலாப்பழங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது சீசன் என்பதால் பழங்கள் பழுத்து தொங்குகின்றன. ஆனால் மக்கள் வெளியே வர தடை காரணமாக அவற்றை பறிக்க முடியாமல் மரத்திலேயே வெடித்து அழுகி விட்டன. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பண்ருட்டி பகுதியில் பலாப்பழங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகின்றன. இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பலா பயிரிடப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் மகசூல் கிடைக்கும்.

தற்போது பலாப்பழங்கள் பழுத்துள்ள நிலையிலும் அவற்றை பறிக்க முடியாமலும், ஏற்கனவே பறிக்கப்பட்ட பழங்களும் லாரிகளில் ஏற்றி வெளியிடங்களுக்கு அனுப்ப முடியாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர குடோன்களிலும் பழங்கள் அழுகிய நிலையில் உள்ளன. இவ்வாறு சுமார் 2 ஆயிரம் டன் பலாப்பழங்கள் அழுகி வீணாகி விட்டன. இதனால் இப்பகுதியில் மட்டும் சுமார் பல கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இப்பிரச்னையில் அவசர நடவடிக்கை எடுத்து ஊரடங்கு உத்தரவால் இழப்புகளை சந்தித்த பலாப்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.


Tags : Multi-crores , Exports, juices, rot and waste
× RELATED அதிமுக ஆட்சியின்போது மருந்துகள்...