×

டெல்டா கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் நெல்மூட்டைகள் தேக்கம்: கோடை மழை வந்தால் சேதமாகும் அபாயம்

திருக்காட்டுப்பள்ளி: டெல்டா மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. கோடை மழை வந்தால் சேதமாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை முடிந்ததையொட்டி அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகாவில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய கிராமங்கள் தோறும் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையங்களில் விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வீரமரசன்பேட்டை திறந்தவெளி கிடங்கில் சேமிக்கப்பட்டு அங்கு முறையாக தார்பாய் போட்டு மூடி பாதுகாப்பாக வைப்பது வழக்கம்.

ஆனால் தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த நிலையங்களில் திறந்தவெளியில் தார்பாய் போட்டு பாதுகாப்பாக மூடப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே கோடைமழை பெய்தால் நெல் மூடடைகள் சேதமடையும் நிலை உள்ளது. இதனால் அரசு பணம் விரயமாகும். இதுகுறித்து நாகாச்சி கிராம விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அலமேலுபுரம் நாகாச்சி நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கிடங்குக்கு எடுத்து செல்லப்படாமல் திறந்தவெளியில் தார்பாய் போட்டு பாதுகாப்பாக மூடாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல நிலையங்களில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திடீர் கோடை மழை வந்தால் நெல் மூட்டைகள் சேதமாகும்.

எனவே உடனுக்குடன் லாரிகள் மூலம் அரசு சேமிப்பு கிடங்குக்கு நெல் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். அதுவரை பாதுகாப்பாக தார்பாய் போட்டு மூடி வைக்க வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் கூறுகையில், வெண்டயம்பட்டி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு பாதுகாப்பாக மூடப்படாமல் உள்ளது. காலதாமதமாக தண்ணீர் திறந்து நடவு செய்த விவசாயிகள் தற்போது மூழுவீச்சில் அறுவடை செய்து வருகின்றனர். வெண்டயம்பட்டி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரசு சேமிப்பு கிடங்குக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை தார்பாய் போட்டு மூடி பாதுகாக்க வேண்டும் என்றார்.

இதே போல் திருவாரூர், தஞ்சை, நாகை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களிலும் லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் பாதுகாப்பின்றி தேங்கி கிடப்பதாகவும், இதனால் அரசு பணம் விரயமாகக்கூடும். எனவே உடனுக்குடன் லாரிகள் மூலம் அரசு சேமிப்பு கிடங்குக்கு நெல் மூட்டைகளை எடுத்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பாதுகாப்பாக தார்பாய் போட்டு மூடி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Delta Purchasing Stations ,Paddy fields ,Purchasing Station ,Delta , Delta, Purchasing Station, Paddy fields, Stagnation
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை