×

ஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்; கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை மீரட்டும் மெக்ஸிகோ

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் கொரோனா வைரஸ் பரவும் எனக்கூறி, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்ஸிகோ எல்லையில் அந்நாட்டு மக்கள் கடந்த மூன்று நாள்களாகப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக  அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாள் தொரும் 1000 கணக்கில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 391 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,04,142 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி ஆகிய நாடுகளை மிஞ்சிய  அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது.

இதற்கிடையே, மெக்ஸிகோவில் இதுவரை 700-க்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுடனான மெக்ஸிகோ எல்லையை மூடிவிட்டு ‘அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்’ என்ற  பதாகைகளை ஏந்தியபடி நூற்றுக்கணக்கான மக்கள் முகமூடிகள் அணிந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்  அங்கிருந்து வருபவர்களுக்கு முறையான சோதனை செய்யப்படுவதில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ வரும் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொற்று நோயைச் சமாளிக்க மெக்ஸிகோ அரசால் எந்தச் சுகாதாரத்  திட்டமும் முறையாகச் செய்யப்படவில்லை. அதனால்தான் நாங்கள் இன்று இங்கு நிற்கிறோம். மெக்ஸிகன் ஜனாதிபதிக்கு இங்கு நடக்கும் நிலைமையைப் புரியவைக்கவே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இது அவருக்கு விடுக்கும்  எச்சரிக்கை” எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாகப் பிற நாட்டினர் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அந்த மக்களை அனுமதிக்கக் கூடாது என மெக்ஸிகோ அரசைக் கடுமையாக  எச்சரித்தார். இதைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் மிக நீண்ட சுவர் கட்டப்படும் என அறிவித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்து மெக்ஸிகோ உட்பட பல நாடுகள் ட்ரம்பின்  அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, மெக்ஸிகோ மக்கள் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என்பது போய் அமெரிக்கர்கள் மெக்ஸிகோவுக்குள் நுழையக்கூடாது என மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Repeat America ,Americans ,home ,Mexico ,Corona Affair , The proverbial slogan adage: Americans stay at home; Mexico to Repeat America on Corona Affair
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...