×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உயர்மட்ட குழு அமைக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் கிம்ராஜ் மில்டன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:உயிர்கொல்லி நோயான கொரொனாவின் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 14 வரை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால், சாதாரண கூலித்தொழிலாளர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் பொது விநியோக திட்டத்தில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் மற்றும் தலா ₹1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை ஒரு மாதத்திற்கு எப்படி போதுமானதாக இருக்கும். இந்த தொகையை மாநகரங்களில் இருப்பவர்களுக்கு ₹10 ஆயிரம் என்றும், கிராமப்புற குடும்பங்களுக்கு ₹5 ஆயிரம் என்றும் அதிகரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். உணவு, தங்குமிடம் இல்லாத மக்களுக்கு உணவு வழங்கும் வகையில் பொது இடங்களில் சமையலறைகளை அமைத்து, உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.வேலை இழந்து உணவுக்காக பரிதவிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்யும் பணியை தன்னார்வ அமைப்புகளும், இளைஞர்களும் மேற்கொள்ளும் வகையில், தனியார், மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பில் சித்த, யுனானி மருந்துகளை பயன்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தலைமை செயலாளர் தலைமையில், உள்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அரசிடம் இருந்து பதில் பெற்று தெரிவிக்குமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியனுக்கு உத்தரவிட்டனர்.

Tags : IOC ,committee ,Coronation Prevention Coronation Prevention , IOC order, set up high-level,committee ,Coronation Prevention
× RELATED 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் போது...