×

தற்போதைய முடக்க நிலையில் வங்கிகள் இணைப்பு மிகவும் சவாலானது: அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: தற்போதைய சூழ்நிலையில், ஏப்ரல் மாதம் முதல் வங்கிகள் இணைப்பை அமல்படுத்துவது மிகவும் சவாலான விஷயம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதுபோல், 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக்க, வங்கிகள் இணைப்பு திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கி ஆகியவை யூனியன் வங்கியுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இந்த திட்டத்தில் மாற்றம் வருமா என நிருபர்கள் கேட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், ‘‘வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி அமலுக்கு வரும். இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை’’ என்றார். இதுகுறித்து யூனியன் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு  4 பெரிய வங்கிகளாக உருவாக உள்ளன. இதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்து விட்டன. இருப்பினும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த சூழ்நிலையில், திட்டமிட்டபடி ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து வங்கிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும்’’ என்றார்.

Tags : banks , banks' link , challenging, current disabling situation,officials information
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்