×

வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 746 இந்தியாவில் பலி 17

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 746 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 746 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 பேர் வெளிநாட்டினர். 73 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 673 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2 பேரும், மத்தியப் பிரதேசம், தமிழகம், பீகார், பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேத்தில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.  

வார்டு பாய்க்கு தொற்றியது
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பணியாற்றிய 20 வயது வார்டு பாய்க்கு இந்த வைரஸ் தொற்றியுள்ளது. இதனால், இம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 135 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக இருந்தது. இந்நிலையில், விதர்பாவில் புதிதாக 5 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதனால், இம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 4 பேர் இறந்துள்ளனர்.

மருந்து விற்பனைக்கு கட்டுபாடு
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தொற்றுவதை தடுக்க, ‘ஹைட்ராக்சி குளோரோகுய்ன்’ மருந்தை கொடுக்கும்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) பரிந்துரை செய்துள்ளது.
அதனால், இது தற்போது மிக அத்தியாவசிய மருந்தாக உள்ளது. இதனால், பொதுநலன் கருதி இந்த மருந்துகளை விற்கவும், விநியோகம் செய்யவும்  கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதன் மூலம், ஹைட்ராக்சி குளோரோகுய்ன் கலவையுடன் உள்ள எந்த மருந்தையும், சில்லரை மருந்து கடைகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் புதிய பொறுப்பு
கொரோனா தடுப்பு பணிகளை மாநில வாரியாக கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்து அமைச்சர்கள் தினசரி அறிக்கையை சமர்பிக்க வேண்டுமென பிரதமர் அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.



Tags : deaths ,India , 746 India, Fall 17, Corona Virus
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...