×

மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் தண்ணீர் விநியோகம் நிறுத்தம்: பொதுமக்கள் தவிப்பு

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 14வது  மண்டலத்துக்கு உட்பட்ட  புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு, குடிநீர் வாரியம்  சார்பில் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உபயோகத்திற்கு மக்கள்  ஆன்லைனில் பதிவு செய்து, பணம் செலுத்தி  ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றுவந்தனர்.  இந்நிலையில், ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல், பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் தண்ணீர் வழங்கப்படுவதில்லை, என கூறப்படுகிறது. தினசரி 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கிய குடிநீர் வாரியம் தற்போது 10 முதல் 15 பேர் வரை மட்டுமே தண்ணீர் வழங்குவதாக கூறப்படுகிறது.  இதனால், அப்பகுதி  மக்கள் தனியார் லாரி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இதுகுறித்து குடியிருப்புவாசிகள்  கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் குடிநீர் வாரியம் வாரம் ஒருமுறை சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வழங்கி வருகிறது.  இது போதுமானதாக இல்லை. வீட்டு உபயோகத்திற்கு தேவையான தண்ணீரை ஆன்லைன் மூலமாக புக் செய்து  பெற்று வந்தோம். ஆனால் அதுவும் தற்போது கிடைப்பதில்லை.  கடந்த 10 நாட்களாக ஆன்லைனில் புக்செய்தால் புக்கிங் முடிந்துவிட்டது என்கிறார்கள். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால்  கொரோனாவினால் ஒப்பந்த லாரி ஓட்டுனர்கள் சரிவர வருவதில்லை என்கிறார்கள்.  ஆனால் இந்த ஒபபந்த லாரி ஓட்டுனர்கள் தனியாருக்கு மட்டும் உடனுக்குடன் தண்ணீர் சப்ளை செய்கிறார்கள்’’ என்றனர்.Tags : Madipakkam , Folding, flushing, water distribution, corona
× RELATED தமிழகத்தில் 50 நாட்களில் கொரோனா...