×

தீவிரம் புரியாமல் சாலையில் நடமாடுவதை தடுக்க மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகளுக்கு கட்டுப்பாடு:பிற்பகல் 2.30 மணிக்கு மூடப்படும் ,..நாளை முதல் அமலுக்கு வருகிறது

* அத்தியாவசிய மளிகை பொருட்கள் காலை 6 முதல் மதியம் 2.30 வரை.
* பெட்ரோல் பங்குகள் காலை 6 முதல் மதியம் 2.30 வரை.
* ஆன்லைன் உணவு டெலிவரிக்கு காலை சிற்றுண்டி 7 மணி முதல் 9.30 மணி வரை, மதியம் உணவு 12 மணி முதல்  பிற்பகல் 2.30 மணி வரை, இரவு உணவு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே வழங்க வேண்டும்.
* கோயம்பேடு மார்கெட்டில் மாலை 6 முதல் காலை வரை மட்டுமே பொருட்கள் இறக்க வேண்டும்.
* காலை 6 முதல் மதியம் 2.30 வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

சென்னை: கொரோனாவின் தீவிரம் புரியாமல் மக்கள் சாலைகளில் நடமாடுவதை தடுக்க  மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளை பிற்பகல் 2.30 மணியோடு மூட தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வர உள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து அத்தியாவசியப் பொருட்கள், பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் போன்ற பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும், ஒரு சிலர் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல், தெருக்களிலும் சாலைகளிலும் தேவையின்றி நடமாடுவதைக் கட்டுப்படுத்தவும்,  உயர் அலுவலர்களுடன்  முதல்வர் நேற்று கலந்தாய்வு நடத்தினார். கொரோனா நோய் தொற்று பொது மக்களுக்கு பரவாமல் தடுக்க பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த உத்தரவுகள் 29ம் தேதி முதல் (நாளை) நடைமுறைக்கு வருகின்றன.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும்.  வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளர்கள் முறையாக பாதுகாப்பு, சுகாதார முறைகளை கடைபிடித்தல் போன்றவற்றை சென்னையில் மாநகராட்சி ஆணையரும் பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களும் ஒரு சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.  பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்.  எனினும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்க்குகள் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும். மருந்தகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும்.

வயது முதிர்ந்தோர் வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர், சமைத்த உணவு பொருட்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர். இத்தகையோரின் நலன் கருதி ஆன்லைன் உணவு டெலிவரி ஸ்விகி, ஸ்மோட்டோ, ஊபர் ஈட்ஸ் நிறுவனங்களின் மூலம், காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச்சென்று வழங்க அனுமதிக்கப்படுகிறது.  
 இத்தகைய கடுமையான சூழ்நிலையில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம். சமைக்க தேவைப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களை சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம்.  மாவட்ட நிர்வாகம், இவற்றுக்கென ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பிரிவைத் தொடர்பு கொண்டு பொருட்களை வழங்கலாம்.

 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விரும்புவோரும், மருத்துவ உபகரணங்கள் வழங்க விரும்புவோரும், அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தை அணுகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவற்றுக்கென அந்தந்த மாவட்டத்தில் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு உள்ளது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.  எனினும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பமுடியாமல் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்திலிருந்து வெளியேற முடியாத தொழிலாளர்களுக்கு அவசர கால உதவியாக அந்தந்த மாவட்ட நிர்வாகமும், சென்னை மாநகராட்சியும் தேவைக்கு ஏற்ப உரிய வசதிகளை செய்துதர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சுகாதார கட்டுப்பாட்டு அறை தவிர மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளையும், சுகாதாரத்துறை அவசர கால கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையம் தலைமை கட்டுப்பாட்டு மையமாக வலுப்படுத்தப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள், தங்களைத் தாங்களே கட்டாயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விபரத்தை, சென்னை மாநகராட்சிக்கும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.    

இத்தகைய நடவடிக்கை, சம்பந்தப்பட்ட நபர்களையும், அவர்களின் குடும்பங்களையும், சமுதாயத்திலுள்ள மற்ற மக்களையும் பாதுகாக்க வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் இத்தருணத்தில் பொது மக்களும் இந்நோய்பரவலின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

Tags : road , Grocery Stores, Petrol Punk, Corona
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...