×

நாடு தழுவிய ஊரடங்கு அமலால் ரூ100 கோடி தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்: 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

கோவில்பட்டி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கடலையூர், கயத்தாறு, கழுகுமலை மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, தர்மபுரி மாவட்டம் காவேரிபட்டனம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

குறிப்பாக 80 சதவீதம் பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பெட்டி தொழிலுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகளில் ஏற்கனவே உற்பத்தியான ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல், லாரி ஷெட்டுகள், தீப்பெட்டி ஆலை மற்றும் குடோன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள், பிற மாநிலங்களுக்குள் செல்ல அனுமதி இல்லாததால், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தீக்குச்சி தயாரிப்பிற்கு முக்கிய தேவையான மரத்தடிகள் கேரளாவில் இருந்து கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து குளோரேட் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தீப்பெட்டி தயாரிப்பிற்கான அனைத்து மூலப்பொருள்கள் வரத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இதுகுறித்து கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மத்திய, மாநில அரசுகள் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Curfew, fire box bundles, stagnation
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி