×

கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் ‘ரெட் லைட்’ ஏரியாவில் ‘சமூக இடைவெளி’ சிக்கல்: தினமும் 20,000 வாடிக்கையாளர்களை கண்ட சோனாகச்சி ‘வெறிச்’

கொல்கத்தா: கொரோனா பரவல் அச்சத்தால், கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் ‘ரெட் லைட்’ ஏரியாவில் ‘சமூக இடைவெளி’ சிக்கல் ஏற்பட்டுள்ளது. தினமும் 20,000 வாடிக்கையாளர்களை கண்ட சோனாகச்சி பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய சிவப்பு விளக்கு (பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் இடம்) பகுதியான கொல்கத்தா  அடுத்த சோனாகச்சியில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் வைரசுக்கு 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் இருந்து திரும்பிய 58 வயதான ஒருவர் பலியாகி உள்ளார். தொற்றுநோய் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், ‘ரெட் லைட்’ ஏரியாவில் வசிக்கும் 8,000 பெண்களும் வைரஸ் தொற்று அறிகுறியை உணர்ந்து வருகின்றனர்.
தினமும் சுமார் 15,000 முதல் 20,000 ஆண்கள் வரை ‘ரெட் லைட்’ ஏரியாவுக்கு வருவது வழக்கம். இரவெல்லாம் அங்கு பகலாக இருக்கும். ரெட் லைட் ஏரியாவுக்கு பெரும்பாலும் நகரம், கிராமப்புற மற்றும் வடகிழக்கில் பகுதியில் இருந்து வாடிக்கையாளர்கள் வருவதுண்டு. அங்குள்ள விபசார விடுதிகளில் வங்கதேசம், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட அண்டை நாடுகளை சேர்ந்த பெண்களும் உள்ளனர்.

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க தங்களை அலங்கரித்து தெருவோரங்களில் நிற்கும் விலை மாதர்கள், இன்றைய கொரோனா அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வின்றி உள்ளனர். ஆனால், சோனாகச்சி நகரத்தின் மற்ற பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து, ‘தர்பார் மஹிளா கமிட்டி என்ற அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஸ்மராஜித் ஜனா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாலியல் தொழிலாளர்கள் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமையால் சோனாகச்சிக்கு வந்துள்ளனர்.

அவர்களில் பலர், கொரோனா பரவலால் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மற்றவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வெளியேறி வருகின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் உயிர்வாழ உணவு மற்றும் பணம் தேவை. இப்பகுதியில், பெண்கள் மற்றும் சுமார் 2,000 குழந்தைகள் உணவு மற்றும் பண பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் வியாபாரத்தைத் தவிர்ப்பதற்காக பல சிறுமிகள் பள்ளிக்குச் சென்று சோனாகச்சிக்கு வெளியே வாழ்கின்றனர். தற்போதைய ஊரடங்கு மற்றும் சமூக இடைவௌி உத்தரவு, பாலியல் பெண்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.

அவர்களுக்கு உதவக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. அரசாங்கம் அவர்களைக் காப்பாற்றவில்லை என்றால், அவர்கள் பட்டினி கிடப்பார்கள். அரசாங்கம் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். இங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கோரி மாநில உணவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். கொரோனா வைரஸ் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸை விட அதிகமான சிக்கல்களை உருவாக்கி உள்ளது. 1980ம் ஆண்டுகளில், வாடிக்கையாளர்களுக்கு ஆணுறைகளை கட்டாயப்படுத்தி பாலியல் பெண்களை எங்கள் அமைப்பு சமாதானப்படுத்தியது.

ஆனால், இன்றைய நிலைமை மிகவும் சிக்கலானது. இப்போது, சித்தரஞ்சன் அவென்யூ அல்லது ரவீந்திர சரணி சாலைகளில் பெண்கள் நிற்கவில்லை. ஒரு சாதாரண நாளில், அந்த இடம் நிறைந்து காணப்படும். எங்கள் அமைப்பில் நிதி உள்ளது. ஆனால் அது சோனாகச்சியில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவளிக்க போதுமானதாக இல்லை. வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தநிலையால், பல பெண்கள் தங்கள் வீடுகளுக்கு பணத்தை அனுப்ப முடியவில்லை. இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என எங்களுக்குத் தெரியவில்லை. பீதி காரணமாக வாடிக்கையாளர்கள் வருவதை நிறுத்திவிட்டனர்.

இங்கு குறைந்தது 10,000 பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியவில்லை. இப்போதைக்கு, சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களை ஒரு மாதத்திற்கு வாடகை வசூலிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Sex Workers ,Kolkata Kolkata ,Red Light Area , Kolkata, sex workers, red light, social space, trouble
× RELATED சிறுமிகளை பாலியல் தொழிலில்...