×

கொரோனா எதிரொலி; தாயமங்கலம் கோயில் திருவிழாவிற்கு தடை: பக்தர்கள் வரவேண்டாம் என அறிவிப்பு

இளையான்குடி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலின் பங்குனி திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நாளை நடைபெற இருந்த பங்குனி திருவிழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மற்றும் சர்க்கஸ், ராட்டினம், வியாபாரிகள் யாரும் மறு உத்தரவு வரும் வரை வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தாசில்தார் ரமேஷ் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் 144 தடை உள்ளது.

மேலும் கொராேனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தாயமங்கலம் கோயில் கொடியேற்றம் மற்றும்  திருவிழாவிற்கு தடை விதித்துள்ளோம். மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Echo ,temple festival ,festival ,Thayamangalam ,Corona , Corona, Thayamangalam temple, festival, ban
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்