×

கொரோனாவை கட்டுப்படுத்த குவியும் நிவாரணம்: ஸ்ரீ சாய்பாபா அறக்கட்டளை சார்பில் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி வழங்கல்

மும்பை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால்    பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது வரை இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர்   பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கிடையே, பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தகவல்   தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், நகை விற்பனை, உணவு தொழில்கள், சுற்றுலா  துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை   அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாட தொழிலாளர்கள்  நிலை பரிதாபமாக மாறியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகாக ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளை சார்பில் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.51 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனைபோல் இந்திய அணியின்  முன்னாள் கிர்க்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளார். முன்னதாக, இன்று பாகுபலி பட நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 3 கோடியும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் வழங்கி உள்ளார்.

இதைபோல்,  நடிகர் பவன் கல்யாண்  ரூ.2 கோடி, மகேஷ் பாபு, சிரஞ்சீவி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளனர். ராம் சரண் 70 லட்ச  ரூபாயும், நிதின் 20 லட்சம் ரூபாயும், வருண் தேஜ் 10 லட்சம், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து 10 லட்சமும் வழங்கியுள்ளனர். பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு கட்சி எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், என பல்வேறு தரப்பினர் நிவாரண நிதி வழங்கிய வண்ணம் உள்ளனர்.


Tags : Maharashtra ,Chief Minister ,Sri ,Sai Baba Trust , Rs 51 crore donation to Maharashtra Chief Minister's Relief Fund on behalf of Sri Sai Baba Trust
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கு;...