×

பொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை :மத்திய வர்க்கம் பயனடையும்...ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர்   பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய சேவைகள் அளிக்கும்  நிறுவனங்கள் தவிர, ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள், ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தகவல்  தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், நகை  விற்பனை, உணவு தொழில்கள், சுற்றுலா துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை  அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அன்றாட தொழிலாளர்கள் நிலை பரிதாபமாக  மாறியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், கொரோனாவால் ஏற்பட்டுள்ள  பொருளாதார பாதிப்பில் கவனித்து வருகிறோம்.ரிவர்ஸ் ரெப்ரோ 4.9 லிருந்து 4 ஆக குறைக்கப்படும். அதே போல ரெப்போ விகிதம் 5.5 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆக குறைப்பு என்று தெரிவித்தார். இதனால் வீட்டுக்கடன் வட்டி குறைய  வாய்ப்புள்ளது.

மேலும், வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை. கடன் வசூலிப்பை 3 மாதம் நிறுத்திவைக்க உத்தரவு; இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்பட கூடாது என பல்வேறு சலுகைகளை  அறிவித்தார். இந்நிலையில், கொரோனாவால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் பணப்புழக்கத்தை மேம்படுத்தும்,  நிதி செலவு குறைக்கும் இதனால், மத்திய தர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது என்றும்  என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம் வரவேற்பு:

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி வீதத்தைக் குறைப்பதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவையும், அதிக  பணப்புழக்கத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் நான் வரவேற்கிறேன். எனினும், EMI தேதிகளை ஒத்திவைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு தெளிவற்ற மற்றும் அரை மனதுடன் உள்ளது. அனைத்து EMI செலுத்த வேண்டிய  தேதிகளும் தானாக ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Modi ,Announcement ,RBI , Best move to protect the economy: Middle class will benefit ...Prime Minister Modi applauds RBI announcement
× RELATED மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம்...