×

144 தடையை கடுமையாக கடைபிடிங்க: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம்  தேதி மாலை 6 மணி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி  அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்திலும் ரயில், பஸ் போக்குவரத்து, அரசு, தனியார் அலுவலகங்கள்  வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். சிறிய மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை, பால் விற்பனை, பத்திரிகைகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அரசு அனுமதித்துள்ளது.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு  நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி  தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு  கொரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.  இதற்கென பொதுமக்களின் நன்மை கருதி, 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும்  14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர்  மோடியிடம் முதல்வர் விளக்கியுள்ளார். 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமரிடம்  கூடுதல் நிதி ஒதுக்க முதல்வர் பழனிசாமி கேட்டு கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Modi ,Palanisamy , 144: Strict adherence to ban: Prime Minister Modi asked Palanisamy
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...