×

மதுரையில் திடுக் சம்பவம் கொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியை கடத்திய துபாய் வாலிபர்: சிவகங்கை அருகே மடக்கிய போலீசார்

மதுரை: கொரோனா வைரஸ் தடுப்புக்கென பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்று தெரிந்தால், வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். இதற்காக, மதுரை விமான நிலையம் அருகே கூட்டுறவு பயிற்சி மையத்தை கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு முகாமாக மாற்றியுள்ளனர்.  துபாய், சிங்கப்பூர், குவைத், இலங்கையில் இருந்து கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை மதுரை விமான நிலையத்திற்கு மொத்தம் 439 பயணிகள் வந்தனர். அவர்கள் பரிசோதனைக்குப் பின், இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். துபாயில் இருந்து மதுரைக்கு கடந்த 21ம் தேதி சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியை சேர்ந்த 22 வயது வாலிபர் வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவக் குழுவினர் முகாமில் தங்கவைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென்று அந்த வாலிபர் யாருக்கும் தெரியாமல் முகாம் சுவர் ஏறி குதித்து தலைமறைவானார். நேற்று காலை சுகாதாரத்துறையினர் கணக்கெடுத்தபோது வாலிபர் மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் முத்துவேல், அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கடந்த சில நாட்களாக செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டு, சோர்வாக இருந்தது தெரிய வந்தது.இதனைத்தொடர்ந்து, போலீசார் சிவகங்கை மாவட்ட போலீசாருக்கு தொடர்பு கொண்டு விசாரித்ததில், அவர் கீழப்பூங்குடியில் உள்ள வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது. அவருடன் வேறு யார் தொடர்பில் இருந்தார் என விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை அந்த வாலிபர் காதலித்துள்ளார். அவருக்கு வரும் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால், திருமணத்திற்கு முன்பாக காதலியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முடிவு செய்து, நண்பர்கள் உதவியுடன் தப்பி சென்ற வாலிபர், காதலியுடன் தலைமறைவானது தெரிந்தது.

இதனிடையே காதலியின் பெற்றோர், தங்கள் மகள் மாயமானதாக போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிவகங்கை அருகே சோதனைச் சாவடியில் அவர்களை போலீசார் மடக்கினர். இரண்டு பேரையும் தனித்தனியாக பிரித்த போலீசார்  வாலிபரை மதுரை முகாமிற்கு அனுப்பி வைத்தனர். காதலியை சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.


Tags : Madurai Dubai ,coronation camp ,teenager ,camp ,Corona ,Madurai , Dubai teenager,abducts,girlfriend, Corona camp , Madurai
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை