×

கோயில் கோயிலாக மணமக்கள் அலைக்கழிப்பு நீண்ட போராட்டம் நடத்தி வாலாஜா கோயிலில் திருமணம்: 25 பேர் மட்டும் பங்கேற்பு

வாலாஜா: கோயில், கோயிலாக அலைக்கழித்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு வாலாஜா கோயிலில் தனியார் ஊழியர் திருமணம் நடந்தது. இதில் 25 பேர் மட்டுமே பங்கேற்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா காமராஜர் நகரை சேர்ந்தவர் சஞ்சீவி, பட்டு நெசவுத் தொழிலாளி. இவரது மகன் ராஜ்குமார்(31). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலன்-சரோஜா தம்பதியின் மகள் கமலா(28) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்கு திருப்பதியில் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பிதழ்களை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கியிருந்தனர்.  

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் மூடப்பட்டது. இதனால், வாலாஜாவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். ஆனால், போலீஸ் கெடுபிடியால் அங்கு முடியாது என்று கைவிரித்தனர்.
பின்னர், வாலாஜா வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்தை அணுகியபோது அவர்களும், ‘போலீசார் அனுமதி வழங்கினால் மட்டுமே திருமணம் நடத்த முடியும்’ என்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீஸ் உயரதிகாரிகளை தொடர்புகொண்டனர். அதிகம்பேர் கூடக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடைசியாக அனுமதி கிடைத்தது. இதையடுத்து, வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை திருமணம் நடந்தது. அப்போது, மணமக்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். திருமண விழாவில் 25 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதன்பின்னர் மணமகன் வீட்டில் எளியமுறையில் விருந்து நடைபெற்றது.

‘சார், நான்தான் மணப்பெண்...’
திருமணத்துக்காக காஞ்சிபுரத்தில் இருந்து வேலூரில் தங்கிய மணமகள் கமலா, நேற்று முன்தினம் மாலை அங்கிருந்து காரில்  புறப்பட்டார். ஆனால், வழியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, கமலா, ‘சார், நான்தான் மணப்பெண். எனக்கு தான் திருமணம்’ என கூறி, ‘திருமண அழைப்பிதழை காட்டினார். அதனை வாங்கி பார்த்த போலீசார் திருப்பதியில் திருமணத்திற்கு வாலாஜாவுக்கு ஏன் செல்கிறீர்கள்?’ என கேட்டனர். ஒவ்வொரு இடத்திலும் விளக்கம் அளித்தபடி சென்றதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என மணமகள் தெரிவித்தார்.

Tags : wedding ,Bride ,Valaja Temple , wedding , bride-to-be,Valaja Temple
× RELATED பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு...