×

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனித்திருப்போம், விழித்திருப்போம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனித்திருப்போம், விழித்திருப்போம்” என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவின் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். உலகத்தையே ஆட்டிப்படைத்து இருக்கிற கொரோனா வைரஸால் தினசரி கொத்துக்கொத்தாக மனித உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவை பொறுத்தவரையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது. 10க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 20 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பையும், வழியையும் தடுத்து, அதில் இருந்து தற்காத்து கொள்வது நமது கையில் தான் இருக்கிறது. நமக்கு நாமே சுயக்கட்டுப்பாடு, சுயச்சட்டம் போட்டு தனிமைப்படுத்துவதை தவிர கொரோனா பரவாமல் தடுக்க வேறு மாற்று வழி இல்லை.

கொரோனா பராவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி பிரதமர் மோடி பிறப்பித்திருக்கிற உத்தரவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கொரோனா வைரஸை பொறுத்தவரை உடனுக்குடன் பரவக்கூடிய தொற்று நோயாக இருக்கிறது. அதனால், தான் மனிதர்கள் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருக்க வேண்டும் என்கிறார்கள். நீங்களாகவே மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல் மருத்துவர்களை அணுகுங்கள். 21 நாட்கள் ஊரடங்கை வரவேற்கிற அதே சூழலில், சிறு, குறு வணிகர்களால் 3 வாரம் இழப்பை நிச்சயமாக தாங்கி கொள்ள முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். அவர்களின் சுமைகளை மத்திய, மாநில அரசுகள் தான் தாங்க வேண்டும். இலவச உணவு, மளிகை பொருட்கள், அன்றாட ஊதியம், உதவி தொகைகள், வரிவிலக்கு, மானியங்கள், கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் ஆகியவற்றிற்காக ஒரு பெரும் தொகையை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மாநில அரசு அறிவித்திருக்கிற ரூ.1000 போதுமானது அல்ல.

அதனை அதிகப்படுத்த வேண்டும் நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், கட்டிட தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ.15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இதை 2 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறேன். மாநில அரசும் இதே போல் தனித்தொகையை ஒதுக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவர்கள், நர்சுகள், ஊழியர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதார துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், ஊடகத்துறையை சார்ந்த நண்பர்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. உங்களது பணி என்பது எல்லையை காக்கும் ராணுவ வீரர்களின் பணியை போல மிகவும் மகத்தானது.  நாட்டிற்காக, நாட்டுமக்களுக்காகவும், தங்களையை அர்பணித்திருக்கிற உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நெகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் செய்வது ஊழியம் அல்ல, உயிர்க்காக்கும் பணி.

கொடூர வைரஸில் இருந்து மக்களை காக்கும் மகத்தான சேவைக்கு காலம் நிச்சயம் கைமாறு செய்யும். திரும்ப, திரும்ப, திரும்ப வலியுறுத்தி சொல்வது ஒன்றே ஒன்று தான். மக்கள் அனைவரும் தனித்திருங்கள், வீட்டுக்குள்ளே இருங்கள். கொரோனா வைரஸை வெல்வோம், நம்பிக்கையோடு இருப்போம்.
மனித இனத்தை அச்சுறுத்தும் எத்தனையோ உயிரிகள் படையெடுப்புகளை எதிர்க்கொண்டு தான் மனித சமுதாயம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. எதையும் எதிர்க்கொள்ளும் வல்லமை, நம்முடைய அறிவியலுக்கும் உண்டு, உடலுக்கும் உண்டு, உள்ளத்துக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தனித்திருப்போம், விழித்திருப்போம். வணக்கம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

முகக்கவசம், சானிடைசர் வழங்க எம்பி, எம்எல்ஏக்களுக்கு உத்தரவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக் கவசம், சானிடைசர், சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்.

Tags : spread , remain separate,watchful, prevent ,spread , coronavirus
× RELATED கட்டுக்குள் இல்லை, கட்டுக்கு...