×

மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்

புதுடெல்லி: நாடு தழுவிய முடக்கம் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மேற்குவங்க தொழிலாளர்களுக்கு, உதவி செய்ய வேண்டும் என  18 மாநில முதல்வர்களுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா, உ.பி, கேரளா, டெல்லி, ஒடிசா, கர்நாடகா  மற்றும் பஞ்சாப் உட்பட 18 மாநில முதல்வர்களுக்கு மம்தா எழுதிய கடித்தத்தில் அவர் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த  தொழிலாளர்கள் பலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணி புரிகின்றனர். 21 நாள் முடக்கம் காரணமாக அவர்களால், மேற்குவங்கம் திரும்ப  முடியவில்லை.

அவர்கள் உதவி கேட்டு எங்களை அழைக்கின்றனர். இந்த நேரத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதால், அவர்களுக்கு தேவையான  உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். மேற்கு வங்க  தொழிலாளர்கள் 50 அல்லது 100 பேர் என கும்பலாக தங்கியிருப்பர். அவர்களை எளிதில் அடையாளம் காணலாம். அவர்கள் பற்றிய விவரத்தை  எங்கள் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை செயலருக்கு அனுப்புவார். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய  வேண்டும். எங்கள் மாநிலத்தில் சிக்கியிருக்கும், பிற மாநில தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Mamata Banerjee ,West Bengal , Mamta Banerjee, West Bengal, Chief Minister Mamta Banerjee
× RELATED நெற்றி, மூக்கில் படுகாயம் மம்தாவை தள்ளிவிட்டது யார்?