×

சபாஷ் போலீஸ்... பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தங்களின் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக 144 உத்தரவை நடைமுறைப்படுத்தி வரும்  போலீசாருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில்  முடங்கி உள்ளனர். ஆனால் போலீசார் தங்களது குடும்பங்களை விட்டுவிட்டு உயிரை பணயம் ைவத்து இரவு பகலாக அரசு பிறப்பித்த 144 தடை  உத்தரவை  அமல்படுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த  இரண்டு நாட்களாக மாவட்ட வாரியாக மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் மாவட்ட எல்லைகள், போலீஸ் நிலைய எல்லைகள்,  முக்கிய சாலைகள் என பல இடங்களில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காலை முதல் தங்களுடைய பணி  முடியும்வரை வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் நின்றபடியே பணி செய்கின்றனர்.

சில நேரங்களில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்கின்றனர். உடல் வலியையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
 அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளது. ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டு, உயிர்க்கொல்லி வைரசை எதிர்த்து துணிச்சலாக பணியாற்றி  வருகின்றனர். ஆனால் சில இடங்களில் பொதுமக்கள் கொரோனா தாக்கம் குறித்து சரியாக உணராமலும், போலீசாரின் பணியை உதாசீனப்படுத்தி,  ஊரடங்கை மதிக்காமல் சாலைகளில் பைக் மற்றும் கார்களில் ஜாலியாக சுற்றி வருகின்றனர். பல இடங்களில் வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடியும்  வருகின்றனர். அவர்களிடம் போலீசார் கனிவுடன் அணுகி முககவசம் அணிய வேண்டும் என்றும் அவசர தேவையை தவிர யாரும் வெளியே வர  வேண்டாம் என்றும் கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

 பொதுமக்கள் தொற்று நோய் குறித்து சுயகட்டுப்பாடு இல்லாமல் சுற்றி வருகின்றனர். அவர்களை போலீசார் பல முறை கண்டித்தும் தொடர்ந்து சுற்றி  வருபர்களை தான் வேறு வழியின்றி தங்களது பாணியில் கவனிக்கும் சூழ்நிலை எற்படுகிறது. அப்படி இருந்தும் மக்கள் தொடர்ந்து தொற்று நோய்  பரப்பும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டு வருகின்றனர். அதை பொதுமக்களே உணர்ந்து வீட்டிற்குள் இருக்க வேண்டும். உயிரை பாதுகாக்கும் காவல்  துறையை மட்டும் குறை சொல்லக்கூடாது. போலீசார் இந்த பாதுகாப்பு பணிக்கு இடையே சாலையோரம் ஆதரவற்றவர்களுக்கும் தங்களால் முடிந்த  உதவிகளையும் அவர்கள் செய்து வருகின்றனர். தெரு நாய்கள், காகங்கள் போன்றவற்றுக்கும் கூட போலீசார் சிலர் உணவு கொடுத்து வருவதை பல  இடங்களில் காண முடிந்தது.

 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள  பெண் காவலர்களின் நிலை மிகவும் துயரமாக  உள்ளது. பலர் கடந்த இரண்டு நாட்களாக வீடுகளுக்கு செல்ல  முடியாமலும் சரியாக தூக்கம் இல்லாமலும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் உயிரைக் காப்பதற்காக போலீசார் செய்துவரும் பணியை  பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டியும், கவிதைகள் எழுதியும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் பாதுகாப்பு பணியில் உள்ள  காவலர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகளையும் வாங்கி கொடுத்து நன்றி தெரிவித்து வருகின்றனர். சென்னையில் போலீஸ் கமிஷனர்  ஏ.கே.விஸ்வநாதன் நகர் முழுவதும் சுற்றி சுற்றி வந்து போலீசாரை உற்சாகப்படுத்தி வருகிறார். அதேபோல மாவட்டங்களில் பணியாற்றும் எஸ்பிக்கள்,  சரக டிஐஜிக்கள், மண்டல ஐஜிக்களும் தங்களது எல்லைக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி வந்து சாலையில் நிற்கும் போலீசாரை பாராட்டி  வருகின்றனர்.

Tags : Sabash Police ,activists ,public ,Corona , Corona, public and social activists
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...