×

சென்னை அருகே பரிதாபம்: ஏரியில் மூழ்கி 3 மாணவிகள் பலி

சென்னை: ஒரே கிராமத்தை சேர்ந்த 3 மாணவிகள், ஏரியில் குளித்த போது நீரில் மூழ்கி பலியான சம்பவம் திருவள்ளூர் அருகே பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.  திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது  மனைவி குமாரி (37).  இவர் தனது மகள் ஐஸ்வர்யா (16), அருகில் வசிக்கும் செல்வராஜ் மகள் சந்தியா (17), ரமேஷ் என்பவர் மகள் சவுமியா (14) மற்றும் விடுமுறைக்கு  தனது வீட்டுக்கு வந்திருந்த உறவினர்  சென்னை தாம்பரத்தை சேர்ந்த முருகன் மகள் தர்ஷினி (15)  ஆகியோருடன், நேற்று மாலை அருகில் உள்ள  நேமம் ஏரியில் குளிக்க சென்றார்.

ஏரியில் குளித்துக்கொண்டு இருந்தபோது நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற சவுமியா,  சந்தியா, தர்ஷினி, ஐஸ்வர்யா ஆகிய  நான்கு  மாணவிகளும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை கண்ட குமாரி சத்தம் போட்டார் அப்போது அவ்வழியாக சென்றவர்கள் ஏரியில் இறங்கி  ஐஸ்வர்யாவை மட்டும் ஆபத்தான நிலையில் மீட்டனர். மற்ற மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் கிராம மக்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியின் சேற்றில் சிக்கி பலியான மூன்று மாணவிகளின் சடலங்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  உயிருக்கு போராடிய ஐஸ்வர்யா, அவரது தாய் குமாரி ஆகிய இருவரையும் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  அங்கு  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இதுகுறித்து, வெள்ளவேடு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சவுமியா, சந்தியா,  தர்ஷினி ஆகிய மூன்று மாணவிகளின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஏரியில் மூழ்கி பலியான 3 பேரின் சடலங்களைப் பார்த்து உறவினர்கள் மற்றும் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lake ,Chennai , Chennai, Lake, 3 students killed
× RELATED ஏரியில் மூழ்கி வாலிபர் பலி