கள்ளக்காதலில் பிறந்த குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்து கொலை: சடலத்தை கிணற்றில் வீசிய தாயிடம் விசாரணை

மாதனூர்: கணவருடன் தகராறு செய்துவிட்டு பிரிந்து வாழும் இளம்பெண், கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு ஊராட்சி கல்லப்பாறையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே இன்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து கிணற்றில் எட்டிப்பார்த்தனர். அப்போது கிணற்றில் ஒரு கோணிப்பை மிதந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விஏஓ தீபாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிணற்றில் இருந்த கோணிப்பையை மீட்டு திறந்து பார்த்தபோது அதில் பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்று அழுகிய நிலையில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இக்குழந்தை யாருடையது, இது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதா? எதற்காக இவ்வாறு செய்தார்கள், இக்குழந்தையின் பெற்றோர் யார், கொலையாளிகள் யார் என விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இதில் அதேபகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி ஜெயலட்சுமியின் குழந்தை என்பதும் கள்ளக்காதலில் பிறந்ததால் தாயே குழந்தையை கொன்றதும் தெரிந்தது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:பெருமா ளுக்கும் ஜெயலட்சுமிக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.  தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த திருமணமான ஒருவருக்கும் ஜெயலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஜெயலட்சுமி கர்ப்பிணியானாராம்.

கர்ப்பிணியான பிறகு அவர் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குளேயே இருந்துள்ளார். கடந்த 20ம்தேதி வீட்டிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் பிரிந்துசென்ற நிலையில் வேறு நபருடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்தது ஊருக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் எனக்கருதிய ஜெயலட்சுமி, மறுநாள் காலை அந்த குழந்தைக்கு எருக்கம்பால் கொடுத்துள்ளார். இதில் குழந்தை சிறிதுநேரத்தில் பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது. பின்னர் சடலத்தை உடனடியாக வெளியே கொண்டுசென்றால் அனைவருக்கும் தெரிந்துவிடும் எனக்கருதிய ஜெயலட்சுமி அன்றிரவு வரை காத்திருந்தார்.

இரவு 10 மணிக்கு மேல் குழந்தையின் சடலத்தை கோணிப்பையில் கட்டி அங்கிருந்த விவசாய கிணற்றில் வீசியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜெயலட்சுமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொலை செய்து சடலத்தை தாயே கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>