மாவட்ட செயலாளர் பதவி பறிப்பால் ராஜேந்திரபாலாஜி கடும் அதிருப்தி: ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை

சென்னை: மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடும் அதிருப்தியில் உள்ளார். அவர் தனது தீவிர ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பால்வளத்துறை அமைச்சராகவும், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. இவர் அனைத்து பிரச்னைகளிலும் தனது கருத்துக்களை தெரிவிப்பார். இது சர்ச்சைக்குரியதாகி விடும். அதிமுகவில் இருந்து கொண்டே நடிகர் ரஜினிக்கும் கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட சசிகலாவுக்கும் தொடர்ந்து ஆதரவாக பேசி வந்தார்.

 கடந்த சில நாட்களாக சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் கட்சி தலைமைக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கினார். இந்தநிலையில் சிவகாசி எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இவருக்கும் இடையே மோதல் எழுந்ததாக கூறப்படுகிறது. ராஜவர்மன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சருடன் சேர்ந்து செயல்படுவதாக சந்தேகித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒரு தாக்குதல் சம்பவத்திலும் அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் அறிக்கை வெளியிட்டனர். இந்த பரபரப்புக்கிடையே கடந்த 22ம் தேதி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின், விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் புதிய மாவட்டச் செயலாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.

பதவி பறிப்பு அறிவிப்பு வெளியானவுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை வரவேற்ற அதிகாரிகள் விஐபிக்கள் தங்கும் அறையில் அமர வைத்தனர். ஆனால், அவரை சந்திக்க முதல்வர் மறுத்து விட்டார். உடனே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சென்றார். அவரும் அமைச்சரை சந்திக்க மறுத்து விட்டார். இதனால் கடுமையான அதிருப்தியில் வீடு திரும்பினார். மறுநாள் அவர் சட்டப்பேரவை கூட்டத்துக்கு வரவில்லை. இதனால் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அமைச்சரின் வீட்டுக்குச் சென்று அவருடன் சமரசம் பேசினார். மன்னிப்பு கடிதம் மட்டும் எழுதிக் கொடுத்தால், மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வாங்கித் தர ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஆனால் அவரோ, மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவி ஜெயலலிதா கொடுத்தது. அந்த பதவியை இவர்கள் எப்படி பறிக்கலாம். நான் மன்னிப்பு கடிதம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து விட்டார்.

  24ம் தேதி அவரது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. வழக்கமாக, அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசும்போது முதலில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை புகழ்ந்து பேசிவிட்டுத்தான் பதிலுரை அல்லது அறிவிப்புக்குள் செல்வார்கள். இதற்காக கவிதையாகவோ அல்லது அடுக்கு மொழியிலோ பேசுவதற்கு கவிஞர்கள், தமிழறிஞர்களிடம் அமைச்சர்கள் எழுதி வாங்குவது வழக்கம். அதேபோல, பால்வளத்துறை அதிகாரிகள் அமைச்சரிடம் சென்று, இதுபோன்ற அறிக்கைகள் எழுதி வாங்குவது குறித்து பேசினர். ஆனால் அவரோ, இனிமேல் அந்த மாதிரி அறிக்கை தேவைப்படாது. நானே பேசிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். இதனால் அமைச்சர் கடுமையான கோபத்தில் இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். அதேநேரத்தில், அமைச்சர் தனது துறை தொடர்பான விவாதத்துக்கு வருவாரா என்ற பரபரப்பும் இருந்தது. ஆனால் அவர் சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால் அன்று கூட்டம் முடிவதாக இருந்ததால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மட்டுமே தங்களது துறை தொடர்பான விளக்கம் அளித்தனர். மற்ற அமைச்சர்களின் துறைகள் மீதான அறிக்கைகளை சட்டப்பேரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.

 அதேநேரத்தில், சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன் முதல்வர் மற்றும் துணை முதல்வரை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சந்தித்தார். அப்போது போட்டோ எடுக்கும்போது மருந்துக்கு கூட சிரிக்கவில்லை. வணக்கம் செய்துவிட்டு, பேசாமல் திரும்பி வந்துவிட்டார். இதனால் தான் கடும் அதிருப்தியில் இருப்பதை முதல்வர் மற்றும், துணை முதல்வருக்கு மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் அவர் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>