×

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் போலீஸ்காரர் மனைவி உள்பட 3 பெண்களிடம் செயின் பறிப்பு: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

அம்பத்தூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் போலீஸ்காரர் மனைவி உள்ளிட்ட 3 பெண்களிடம் 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அம்பத்தூர் அடுத்த கருக்கு டி.டி.பி காலனியை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் (32). அயனாவரம் காவல் நிலைய போலீஸ்காரர். இவரது மனைவி வளர்மதி (27). நேற்று காலை 6 மணியளவில் வளர்மதி தனது மாமியார் ராஜாமணியுடன் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு புறப்பட்டார். டிடிபி காலனி வழியாக நடந்து சென்றபோது பைக்கில் 3 வாலிபர்கள் வந்து இவர்களை வழிமறித்து ராஜாமணியிடம், ஒரு துண்டு சீட்டை காட்டி முகவரி விசாரிப்பது போல் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது மற்றொரு வாலிபர் வளர்மதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க செயினை பறித்துள்ளார். இவர்களது அலறல் சத்தம்கேட்டு, வீடுகளில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் இருவரும் தயாராக இருந்த மற்றொருவருடைய பைக்கி ஏறி செயினுடன் தப்பி சென்றனர்.

புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறி செய்த ஆசாமிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அதேபோல் நேற்று முன்தினம் ஆவடி, லட்சுமி நகர், அன்னை தெரசா தெருவில் நடைபயிற்சி சென்ற பள்ளி ஆசிரியை கவிதா (35) என்பவரிடம் 5 சவரன் தங்க செயின்,  ஆவடி அடுத்த அண்ணனூர், தேவி நகர் பகுதியை சேர்ந்த மும்தாஜ் (65) என்பவரிடம் 6 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, புழல் சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில், வழிப்பறி ஆசாமிகளும் அடங்குவர். இந்நிலையில் இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், ஆவடி ஆகிய பகுதிகளில் பெண்களிடம் கடந்த இரு தினங்களாக செயின் பறிப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே வெளியே வந்த குற்றவாளிகளை போலீசார் கண்காணிக்காவிட்டால் தொடர்ந்து வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர். இதனால், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

Tags : women ,policeman ,Asami , Three women, including , policeman, remain,police custody
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது