×

சென்னையில் தடையை மீறி பைக், கார் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

* தனிமை வீடுகளில் வசிப்பவர்கள் சுற்றினால் பாஸ்போர்ட் முடக்கம்
* கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: 144 தடை உத்தரவை மீறி சென்னையில் பைக் மற்றும் கார் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்  என்றும், கண்காணிப்பு பட்டியலில் உள்ளவர்கள் வெளியே வந்தால் அவர்களின் பாஸ்போர்ட்கள் முடக்கப்படும் என்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் வரும் ஏப்ரல் 14ம் தேதி காலை 6 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை உத்தரவை மீறி சென்னை மாநகரம் முழுவதும் அரசு அனுமதி வழங்கிய நபர்களை தவிர்த்து மக்கள் பலர் பைக் மற்றும் கார்களில் சுற்றி வருகின்றனர். அவர்கள் எந்த வித பதற்றமும் இன்றி மாநகர சாலைகளில் வலம் வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் நிருபர்களிடம் பேசியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான  அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் எல்லாம் திறந்துள்ளது. மக்கள் அவரவர் வீட்டின் அருகே உள்ள கடைகளில் அதை வாங்கி கொள்ளலாம்.

ஆனால் சென்னையில் மக்கள் 144 தடை உத்தரவை மீறி பைக் மற்றும் கார்களில் வெளியே செல்கின்றனர். அவர்களிடம் கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி செல்கின்றனர். இதை பொதுமக்கள் கைவிட வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றி வரும் நபர்களை போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர். மற்ற பகுதிகளில் உள்ளதுபோல் சென்னையில் போலீசார் வாகன ஓட்டிகளிடம் கடினமாக நடந்து கொள்ளவில்லை. அமைதியான முறையில் தான் அறிவுரை கூறி வருகின்றனர். அதை மக்கள் புரிந்து கொள்ள  வேண்டும். அதையே சாக்காக வைத்துக்கொண்டு அடிக்கடி யாரேனும் வாகனங்களில் வெளியே சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
பொதுமக்கள் தங்கள் வீட்டில் அருகில் உள்ள நபர்களுக்கு யாரேனும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அதன்படி போலீசார் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்த நபர்களை அரசு உத்தரவுப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் சில இடங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களிடம் நாங்கள் அமைதியான முறையில் எச்சரித்து வருகிறோம். அதையும் மீறி வெளியே சென்றால் சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட் முடக்க போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கும். வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களை கண்காணிக்க சென்னை முழுவதும் 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம். அப்படி வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.

Tags : Chennai , bike,car , confiscated , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...