×

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்: தமிழகத்தில் கொரோனாவுக்கு முதல் பலி

மதுரை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கட்டிட கான்ட்ராக்டர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுதான். அவருடன் தொடர்பில் இருந்த 100க்கும் மேற்பட்டோர், தற்போது சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.  உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் 4.50 லட்சம் பேர், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18,887 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மதுரை, அண்ணா நகரை சேர்ந்தவர் 54 வயதான கட்டிட கான்ட்ராக்டர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஜமாத் செயலாளராக இருந்தார். இதனால் பள்ளிவாசல்களுக்கு ‘தப்லீக்’ குழுவாக சென்று மார்க்க விஷயங்களை கற்றுத் தரும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று வந்தார்.
கடந்த சில நாட்களாக இவருக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 21ம் தேதி, மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஏற்கனவே அவருக்கு சர்க்கரை, ரத்தஅழுத்தம், இதயக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருந்ததால், தொடர்ந்து மூச்சுத்திணறல் இருந்து வந்தது. நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி, நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். இதனால் மதுரை பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனை அரங்கில் முறையான பரிசோதனைகளுக்கு பின்னர், கான்ட்ராக்டரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதுரை மேலமடை மசூதி அருகே மையவாடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மசூதி உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது. அவரது மனைவி, 2 மகன்கள், மருமகள் ஆகியோர் தற்போது சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவர் வசித்த தெரு, அதனை சுற்றியுள்ள தெருக்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்தும், பிளீச்சிங் பவுடர் போட்டும் அப்பகுதிகளை சுத்தப்படுத்தினர்.

மேலும், உயிரிழந்தவர் கடந்த 9ம் தேதி எதிர் வீட்டில்  நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த விருந்தில்  வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து  அந்த விருந்தில் பங்கேற்றவர்களின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்தனர்.  அவர்களுடைய வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களது உடல் நிலை குறித்து  கேட்டறிந்தனர். ஏதேனும் தொற்று, சளி, இருமல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக  தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர். அவர்களது  வீடுகளிலும், கிருமிநாசினி மருந்துகளை தெளித்து, அவர்களை வீடுகளை விட்டு  வெளியேற வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அவரிடம் தொடர்பில்  இருந்த 100க்கும் மேற்பட்டோரை வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரத்துறை  ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் சந்தேகத்தின்பேரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

உடல் ஒப்படைப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த கான்ட்ராக்டரின் உடலை, மருத்துவமனையில் உறவினர்கள் பார்வையிட அனுமதிக்கவில்லை. மேலும், அவரது உடலில் நவீன கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது. மேலும், அவரது உடல் ‘பாக்ஸ்’ போல் கட்டி கொடுக்கப்பட்டது. மதுரை மேலமடையில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது குறைந்த அளவே உறவினர்கள் பங்கேற்றனர்.

தாய்லாந்து குழு சென்ற இடங்களில் கண்காணிப்பு
தாய்லாந்தில் இருந்து மதுரை வந்த 8 பேருடன், உயிரிழந்த கான்ட்ராக்டர் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இவர்கள் மூலமாகத்தான் கான்ட்ராக்டருக்கு கொரோனா பரவியிருக்க வாய்ப்புள்ளது. இக்குழுவினர் கடந்த 12 மற்றும் 13ம் தேதி மதுரை அண்ணாநகரில் உள்ள மசூதியில் தங்கியுள்ளனர். பின்னர் 14 மற்றும் 15ம் தேதிகளில் பிர்தவுஸ் நகரில் உள்ள மசூதியிலும், 16, 17ம் தேதிகளில் விளாங்குடியில் உள்ள மசூதியிலும் தங்கியிருந்து பலருக்கு மார்க்க விஷயங்களை கற்றுத் தந்துள்ளனர்.
இதேபோல் 18, 19 மற்றும் 20, 21ம் தேதிகளில் செல்லூரில் உள்ள 2 மசூதிகளில் தங்கியுள்ளனர். 22, 23ம் தேதி காஞ்சரம்பேட்டை அருகே மலைப்பட்டியில் உள்ள மசூதியில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து 8 பேரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்த சுகாதாரத்துறையினர், அவர்களது ரத்தமாதிரிகளை எடுத்து தேனிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்கள் யார், யாரை சந்தித்தனர், எங்கெங்கு சென்றனர் என்று வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Coroner ,hospital ,state ,Madurai Government Hospital Madurai ,Corona , Madurai Government Hospital, Tamil Nadu, Corona, first killed
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...