×

கொரோனாவின் பாதிப்பை உணராமல் வீட்டை விட்டு வெளியே சுற்றி வரும் பொதுமக்கள்: கையெடுத்து கும்பிட்ட டிராபிக் போலீஸ்

சென்னை: கொரோனாவின் பாதிப்பை உணராமல் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களிடம் டிராபிக் போலீஸ் ஒருவர் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறி கையெடுத்து கும்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், வீட்டை வீட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், அதையும் மீறி பொதுமக்கள் சிலர் அலட்சியமாக வெளியே சென்று வருகின்றனர். அவர்களால் அவர்களது குடும்பத்துக்கும் ஆபத்து என்பதை உணராமல் இருந்து வருகின்றனர்.  இதனால்தான் அரசு சார்பில் பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில் கடந்த 22ம் தேதி ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும், பொதுமக்கள் கூடுமான அளவு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையிலும் அதையும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் சுற்றி திரிகின்றனர். இதுபோன்று சாலைகளில் திரியும் இளைஞர்களை போலீசார் விரட்டி வருகின்றனர். மேலும், இளைஞர்களின் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். அதேபோன்று வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே உள்ள சிக்னலில் நின்ற கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் டிராபிக் போலீஸ் ஒருவர், வீட்டை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என்று கையெடுத்து கும்பிட்டார். அவர், வாகன ஓட்டிகளிடம் கூறுகையில், ‘‘உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன். உங்கள் காலை தொட்டு கும்புடுறேன், சீரியஸ்னஸ்சை புரிஞ்சுக்கோங்க. வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம்’’ என்று கூறியபடி கையெடுத்து கும்பிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : civilians ,house ,Tropical Police , Corona, Tropic Police, Public
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்