×

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய வேலூர் சிஎம்சி டாக்டர்கள் உள்பட 63 பேர் தனிமை அறையில் கண்காணிப்பு

வேலூர்: வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய சிஎம்சி டாக்டர்கள் உட்பட 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியா வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 96 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். அவர்களில் 63 பேர் வேலூர் தாலுகாவுக்கு உட்பட்டவர்கள் மற்றும் சிஎம்சி டாக்டர்கள் 4 பேர் உள்ளனர்.

இவர்கள் தங்கியுள்ள வீடுகளின் முன்பாக தனிமைப்படுத்தப்பட்டதற்கான அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வேலூர் தாசில்தார் சரவணமுத்து தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்றிரவு பாகாயம் மற்றும் ஓட்டேரி போன்ற பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு கைகளில் முத்திரையிட்டனர். அவர்கள் 28 நாட்களுக்கு வீடுகளில் இருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தாசில்தார் தலைமையில் மாநகராட்சி ஊழியர், வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து அவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சியில் 155 பேர் தனிமை
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்துக்கு தாய், மகள் ஆகியோர் கடந்த 21ம் தேதி அபுதாபியில் இருந்துவந்தனர். இதையடுத்து அவர்களது வீட்டின் சுவற்றில் தனிமைபடுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 155 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீட்டின் முன்பு தனிமைபடுத்தபட்டதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது..

கடலூரில் இருவருக்கு கொரோனா?
கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக மேற்கு வங்க வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் வைரஸ் தாக்கம் தொடர்பாக 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் கடும் சோதனை மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : doctors ,persons ,Vellore CMC ,CMC , Overseas, Vellore CMC Doctors, Monitoring
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...