×

பாதுகாப்பற்ற முறையில் கிடக்கும் உயரழுத்த மின்வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

பெரம்பூர்:  சென்னை திருவிக நகர் மண்டலத்தில் உயர் அழுத்த மின் வயர்கள் பாதுகாப்பற்ற  முறையில் கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது.
 சென்னை திருவிக நகர் மண்டலம் 73வது வார்டுக்கு உட்பட்ட டிக்காஸ்டர் சாலையில் பாதாள சாக்கடையில்  அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் அதை சரி செய்யும் பணி மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளும் நடைபெற்று வந்தன. மாதக்கணக்கில் நடைபெற்ற இந்த பணி தற்போது ஓரளவிற்கு முடிந்துள்ளது.  மழைநீர் வடிகால் வாரிய ஊழியர்கள்  வேலை செய்த இடத்தில் உயரழுத்த மின் வயர்கள் சென்றதால் அதை அகற்றி, வேறு இடத்தில் அமைக்க வேண்டும், என பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

நீண்ட இழுபறிக்கு பின் தற்போது அந்த வேலை முடிந்துள்ளது.  வேலை முடிக்கப்பட்ட இடத்தில் தற்போது அந்த மின் வயர்களை அப்படியே ஆபத்தான முறையில் போட்டுள்ளனர். பெயர் பலகைகள் அகற்றப்பட்டு குப்பை போல போட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மின் பெட்டியில்  அதிக மின்திறன் கொண்ட வயர்கள் செல்கின்றன. அவை பாதி திறந்த நிலையிலும்  பாதி பூமிக்கு வெளியில் தெரியும்படியும்  உள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த பகுதி வழியாக செல்கின்றனர். மேலும் குழந்தைகளும் அதிக அளவில் இந்த பகுதியில் செல்கின்றன. கவனக்குறைவு ஏற்பட்டால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மின் உயர் அழுத்த வயர்களை சரிசெய்து அந்த பகுதியில் விபத்து ஏற்படாதவாறு நிலைமையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : electricians ,accident , Risk , accident, unsafe ,high-rise electricians
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!