×

அத்தியாவசியமின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை: கேரள போலீஸ் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளா முழுவதும் லாக் டவுண் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளா முழுவதும் லாக்டவுண் செய்யப்பட்டுள்ளதால் நேற்று பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. உணவு, மளிகை, பால், பத்திரிகை, மருந்து கடைகள், வங்கிகள், பெட்ரோல் பம்ப், தனியார் வாகனங்கள், மதுக்கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வெளியில் நடமாடினால் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த காரணம் கொண்டும் கண்காணிப்பில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.தடை உத்தரவு இருப்பினும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் போன்ற பகுதிகளில் பலர் தங்கள் சொந்த வாகனங்களில் வெளியே வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து அத்தியாவசிய தேவை இல்லாமல் வந்தவர்களை அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். இன்று முதல் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கண்ணூரில் நகரை சுற்றிப்பார்க்க புறப்பட்ட 8 பேர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று திருவனந்தபுரத்தில் வெளியிடத்தில் நடமாடிய 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் பலர் சாலையில் வாகனங்களில் சுற்றித்திரிவதை கேள்விப்பட்ட டிஜிபி லோக்நாத் பெக்ரா திருவனந்தபுரம் கேசவதாசபுரம் பகுதியில் நேரடியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டார். திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

முககவசத்தை வீசியவர் கைது
அதிகாலை கொச்சி விமான நிலையத்தில் வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த பயணிக்கு முககவசம் கொடுத்தனர். அதை வாங்கிய அவர் வெளியே வீசிவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றார். போலீசார் அவரை கைது செய்தனர்.

2 பேரின் பாஸ்போர்ட் ரத்து
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையை கேட்காமல் பல இடங்களில் சென்று பலரை சந்தித்தனர். இது தான் இந்த மாவட்டத்தில் கொரோனா பரவ காரணமானது. இந்த இரண்டு பேரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். அவர்கள் இனி வெளி நாடு செல்ல முடியாது என்று காசர்கோடு மாவட்ட கலெக்டர் சஜித் பாபு  தெரிவித்துள்ளார்.Tags : Kerala , Kerala police , straying out , necessity
× RELATED கேன்களில் டீ விற்பனை: போலீசார் எச்சரிக்கை