×

கொரோனாவை கடுமையாக சந்தித்து இருக்க வேண்டும்: மத்திய அரசு மீது காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘மருத்துவர்கள், சுகாதார துறை பணியாளர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை மார்ச் 2ம் தேதி வரை வழங்காமல் மத்திய அரசு குற்றம் இழைத்துள்ளது,’ என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ெகாரோனா வைரஸ் பரவல் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன. கடந்த 12ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா அச்சுறுத்தலை மத்திய அரசு மிக கடுமையாக பாவித்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தவறினால், நாடும், மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள்,’ என எச்சரித்தார். இப்போது, கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் பரவி உள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நாட்டின் பல மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், டிவிட்டரில் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இதை தவிர்க்க முடியாது. நமக்கு நடவடிக்கை எடுக்க நேரம் இருந்தது. கொரோனா அச்சுறுத்தலை நாம் மிக கடுமையாக கருதியிருக்க வேண்டும். அதற்கேற்ப நம்மை தயார்படுத்தி கொண்டிருக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.  டாக்டர் காம்னா கக்கரின் டிவிட்டர் பதிவை  ராகுல் காந்தி மறுபதிவு செய்துள்ளார். அதில், ‘என்-95 முகக் கவசங்களின் தட்டுப்பாட்டால் நான் மிக வெறுத்து போயிருக்கிறேன். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சாப்பாட்டு தட்டுகளை தட்டுவது அல்லது கைத்தட்டுவதால் என்ன பயன்?’ என காம்னா கேட்டுள்ளார்.  காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘மார்ச் 2ம் தேதி வரை டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்கள் அளிப்பது குறித்து மத்திய அரசு கவலை கொள்ளவில்லை.  இது, மத்திய அரசின் குற்றமாகும். முகக் கவசங்கள், செயற்கை சுவாச சாதனங்களை ஏற்றுமதி செய்ய 19ம் தேதி வரை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதற்கான பதிலை நாடு எதிர்பார்க்கிறது. அன்பான பிரதமரே, கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு ைகத்தட்டல் தேவையில்லை. அவர்களுக்கு என்-95 முகக்கவசம், கவச ஆடைகள், கையுறைகள், கண்ணாடிகள், ஷூ உறைகள்தான் தேவை.  அரசு மருத்துவர்களின் கூக்குரலுக்கு செவி சாயுங்கள்,’’ என்றார்.

Tags : government ,Corona ,Congress , Corona , tough,Cong , federal government. Accusation
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...