×

ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்: பிரதமர், காங்கிரஸ் முதல்வர்களுக்கு சோனியா கடிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முதல்வர்கள் ஆளும் ராஜஸ்தானின் அசோக் கெலாட், பஞ்சாபின் அமரீந்தர் சிங், சட்டீஸ்கரின் பூபேஷ் பாகல், புதுச்சேரி நாராயணசாமி ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 4.4 கோடி கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறிப்பாக நகரங்களில் சிக்கி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இரண்டாவதாக அதிகளவு பணியாளர்களை கொண்ட கட்டுமான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது.
கொரோனா பாதித்த கனடா நாட்டில், பொதுமக்களுக்கு அந்த அரசு சம்பள நிதியுதவி அறிவித்துள்ளது. இதுபோல் மத்திய அரசும் நிதியுதவி அறிவிக்கவேண்டும். இத்தகைய அசாதரண சூழ்நிலையில் மாநில அரசுகள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் ஆகியவை வேலையின்றி தவிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கூலியை நிதியுதவியாக வழங்கவேண்டும்.

கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கட்டுமான நல வாரியங்கள் ₹49,688 கோடியை வரியாக வசூலித்துள்ள நிலையில், இதில் ₹19,379 கோடி மட்டும் செலவிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த நிதியை பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக வழங்க மாநில கட்டுமான நல வாரியங்கள் பரிசீலனை செய்யவேண்டும். ஏற்கனவே கட்டுமான துறை பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் தற்போது `கோவிட் 19’ மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் இருந்து வந்து பல்வேறு நகரங்களில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவரும் அவர்கள் வேலையிழந்துள்ளனர். ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிைலயில், அவர்களுக்கு அவசரமாக நிதிஉதவி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கூறியுள்ளார்.

Tags : Sonia ,Congress ,leaders ,chiefs , Sonia's letter, Prime Minister ,Congress chiefs
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...