×

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு லாரியில் வந்து இறங்கிய வடமாநில தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சொந்த ஊருக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு யஸ்வந்த்பூர் பகுதியில் ரயிலில் உணவு சப்ளை செய்யும் கேட்டரிங் நிறுவனம் உள்ளது. இங்கு பீகார், மத்தியபிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரயில்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களுருவில் நேற்று காலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் ரயில்கள் இல்லாததால் அனைவரும் பஸ்களில் புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடிக்கு வந்தனர்.

அங்கிருந்து சுமார் 150 பேர் லாரிகள் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தனர். தகவலறிந்த நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், போலீசார், சுகாதாரம்,  வருவாய்த்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சோதனைக்கு அனைவரும் ஒத்துழைத்தனர். பின்னர் கோரக்பூர் வரை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தனி ரயில் மூலம் அனுப்புவதற்கு ரயில்வே மேலாளர் சுந்தரமூர்த்தியிடம் பேசினர். வடமாநிலத்தவர்கள் வந்துள்ள தகவலறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்து, கொரோனா பரவும் நேரத்தில் வடமாநிலத்தவர்கள் வந்துள்ளது தங்களுக்கு அச்சமாக உள்ளதாகவும், அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் தொழிலாளர்கள் அனைவரும் திருப்பத்தூர் நோக்கி சென்றனர். அப்போது போலீசார் பின் தொடர்ந்து சென்று பக்கிரிதக்கா பகுதியில் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அதன்பின்னர் அந்த பகுதிலேயே அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் இருந்தது. அதன் பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதற்கிடையில் திருவனந்தனபுரம்- கோரக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 1.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில்வே மேலாளர் அவர்கள் அனைவரையும் அந்த ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அங்கு வந்த கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Tags : protest ,Northwest ,home ,railway station ,Jolarpet , Public protest , Northwest workers, Jolarpet railway station: sent home
× RELATED டெல்லி குடியிருப்புப் பகுதியில்...