×

கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை: தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களுடன் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 18,887   பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 530ஐ தாண்டி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில்  போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வைரஸ் பரவுவது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட  மக்கள் ஊரடங்கு வெற்றி அடைந்ததற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பே காரணம். நாட்டிற்கு ஒரு பிரச்னை என்றால் அனைத்து மக்களும் ஒன்றுசேர்ந்து நிற்பார்கள் என்பதை காட்டும் வகையில் மக்கள் ஊரடங்கு இருந்தது. கொரோனா  என்ற கொடூர வைரசை தடுக்க வேண்டுமென்றால் சமூகத்திலிருந்து விலகி இருப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும். நம்மையும், நம் குடும்பத்தையும், நம் குழந்தைகளையும், நண்பர்களையும் பாதுகாக்க இதைவிட்டால் வேறு வழியில்லை.  இந்த முடிவால் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்கலாம்.

ஆனால், நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம். ஒவ்வொருவரின் உயிரும் முக்கியம். அதற்காக இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள்  யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். அதைப்பற்றி நினைத்து கூட பார்க்க வேண்டாம். அடுத்த 21 நாட்கள் நமக்கு மிக, மிக முக்கியமானது. இந்த 21 நாட்களில் கொரோனா வைரசின் சங்கிலி தொடரை நாம் துண்டிக்க வேண்டும்.  அதற்காக மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த 21 நாளில் நாம் கவனமாக இருக்காவிட்டால், 21 ஆண்டுகள் பின்தங்கி சென்று விடுவோம்.

பல குடும்பங்கள் நிர்கதியாகி விடும் என்றார். ‘உங்கள் வீட்டை சுற்றி லட்சுமண கோடு போடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் அதை தாண்டாதீர்கள். 21 நாட்களுக்கு வேறெதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். இந்த ஊரடங்கு மக்களை  காப்பாற்றுவதற்கு தான். உங்களுக்கு உதவ போலீசார் இருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே இருங்கள். அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’’ என்றார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி மக்களுடன் இன்று மாலை 5 மணிக்கு காணோலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதி மக்களுக்கு இன்று அறிவுரை அளிக்கவுள்ளார்.


Tags : Modi ,constituency ,Varanasi , Prime Minister Modi addressing his own constituency in Varanasi at 5 pm
× RELATED பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு...